விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஈரானில் கைது நடவடிக்கை

டெஹ்ரானில் கடந்த வாரம் உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியது தொடர்பில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.

“தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்” என்று நீதித்துறை பேச்சாளர் கொலம்ஹொஸைன் இஸ்மைலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானம் தவறுதலாக சுடப்பட்டது என்பதை ஈரான் பின்னர் ஒப்புக்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ஹசன் ரூஹானி நேற்று உத்தரவிட்டிருந்தார். “இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. முழு உலகமும் பார்த்திருக்கும் பிரச்சினை” என்று அவர் கூறினார்.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் இரண்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்கதல்களை நடத்தி சில மணி நேரங்களிலேயே இந்த விமான வீழ்த்தப்பட்டிருந்தது. ஈரானிய குத்ஸ் படை தளபதி ஹாசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே ஈரான் அந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

எனவே அமெரிக்காவின் பதில் தாக்குதல் பற்றிய எதிர்பார்ப்புடன் ஈரான் உஷார் நிலையில் இருந்தபோதே இந்த விமானம் சுட்டுவீழ்த்தக்கட்டது.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை