‘கடன் சலுகை பொதி’ விரைவில் அறிமுகம்

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்தில் வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு சலுகைகள் அடங்கிய ‘கடன் சலுகை பொதி’ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு செவிகொடுக்கும் எமது அரசாங்கம் அவர்களை வலுப்படுத்தி தேசியப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை வலுப்படுத்த நாம் இரண்டு முறைமைகளின் கீழ் தீர்மானங்களை எடுத்துள்ளோம். மத்திய வங்கியின் நிதிச் சபையும் அதற்கு அங்கீகாரம் வங்கியுள்ளதுடன் மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வங்கிகளும் பூரண ஆதரவையும் வழங்கியுள்ளன.

நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். 300 மில்லியனுக்கும் குறைவாக கடன்களைப் பெற்று அவற்றில் 50 சதவீதத்தைச் செலுத்தியுள்ளதுடன் தொடர்ந்து ஏனைய நிதியைச் செலுத்த முடியாதுள்ளவர்கள் மற்றும் 50 சதவீதத்தைக் கூட செலுத்த முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

50 சதவீதக் கடனைச் செலுத்தியுள்ளவர்கள் எஞ்சியுள்ள தொகையை செலுத்துவதற்கு ஒருவருடகாலம் அவகாசம் கொடுக்கப்படும். அவர்களுக்கான வட்டி அறவீடு 50 சதவீதமாக குறைக்கப்படும்.

அதன் பிரகாரம் 2020.12.31ஆம் திகதிவரை இவர்களுக்கான கடன் சலுகை வழங்கப்படும். அதன் பின்னர் கடனை செலுத்த இலகு வழிமுறைகள் மற்றும் நீண்டகாலம் கடன் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். கடனை செலுத்தாததால் வங்கிகள் விதித்துள்ள தண்டப்பண அறவீடும் நீக்கப்படும்.

வர்த்தகர்களை வலுப்படுத்தும் விதத்திலேயே அனைத்துத் தீர்மானங்களும் எடுக்கப்படும். அதேபோன்று 50 சதவீத கடனைக்கூட செலுத்தாதவர்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளோம். இவர்கள் தற்போதுவரை செலுத்த வேண்டியுள்ள வட்டித் தொகையில் 25 சதவீத சலுகை வழங்கப்படும்.

ஏனைய அனைத்துத் தண்டப் பணங்களும் துண்டிக்கப்படும். அதேபோன்று கடனை செலுத்த முடியாது சொத்துக்களை வைத்து பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் அனைத்துத் தண்டப்பணத்தையும் நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்திக்கொள்ள 300 மில்லியனை தாண்டாத இலகு கடன் முறைமையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இக் கடனைப் பெற்றுக் கொள்பவர்கள் நம்பிக்கை தரும் வர்த்தக செயற்திட்டமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக 9 சதவீதம் மற்றும் 9.5 சதவீத வட்டி அறவிடப்படும்.

அதேபோன்று கடன்களைப் பெற்றுக்கொண்டு அதனைச் செலுத்த முடியாத வகையில் சட்டரீதியாக சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களை குறித்த சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 01/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை