19 என்ற போர்வையில்ஐ.தே.க மேற்கொண்ட மோசடிகள் அம்பலம்

நல்லாட்சி எனும் பெயரில் கடந்த அரசாங்கம் நீதித்துறைக்கு இழுக்கை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்க பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல விசனம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது நீதித்துறையில் தலையிடுவதற்கு எடுத்த முயற்சிகள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி இறுவட்டுக்கள் மூலம் உறுதியாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மூலம் நாட்டுக்கு சுயாதீன குழுக்களையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்ததாக பறைசாற்றி வந்த முன்னாள் ஐ.தே.க ஆட்சியாளர்கள் 19ஆவது திருத்தத்தின் போர்வையில் முன்னெடுத்த மோசடி கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதென்றும் அவர் கூறினார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தில் நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இழுக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க என்பவர் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அவருடன் இப் பிரச்சினையை நிறுத்திக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐ.தே.க உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் பிரதம நீதியரசர் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நீதித்துறை மீது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் சந்தேகங்களையும் விரைவில் தீர்க்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதை நீக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாம் பெரும்பான்மையற்றதொரு அரசாங்கத்திலேயே இருக்கின்றோம்.

அதனால் நாம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் பெரும்பான்மை நிலைநாட்டப்படுமாயின் கேலிக்கூத்தாகியுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிராக எம்மால் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 01/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை