ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பும் நடவடிக்ைகயை அரசு நேரடியாக கையாளும்

முகவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது
5 இலட்சம் கட்டணம்; மத்தள ஊடாக பயணம்

புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்களை அரசாங்கத்தினூடாக நேரடியாக அழைத்துச் செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் ஹஜ் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாக ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

இதற்கமைய இம்முறை ஹஜ் முகவர்களுக்கு ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துத் செல்ல வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் ஒரு ஹஜ் யாத்திரிகரிடம் 5 இலட்சம் ரூபா மாத்திரமே அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்தள விமான நிலையத்தினூடாகவே ஹஜ் யாத்திரிகர்கள் அழைத்துச் செல்லப்பட இருப்பதோடு அதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான ஹஜ் குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜக்‌ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு அவரது இல்லத்தில் நடைபெற்றது.இதில் ஹஜ் குழு உறுப்பினர்களான அப்துல் சத்தார் ,அர்கம் உவைஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

சகல ஹஜ் யாத்திரிகர்களையும் குறைந்த கட்டணத்தில் எந்த வித அசௌகரியங்களுமின்றி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினூடாக ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துத் செல்ல முடிவு செய்யப்பட்டதாகவும் ஹஜ் குழு தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மத விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ,சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளதோடு சவூதி அரசாங்கமும் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா எல்லைக்குள் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதோடு அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மினாவிலும் உயர் தரத்திலான கூடாரங்கள் வழங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் ​,நோயாளர்கள் போன்றோருக்கு விசேட வசதிகள் வழங்கப்படும்.

கோட்டாவை 1500 இனால் அதிகரிப்பது குறித்தும் சவூதி அரேபியா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக ஹஜ் குழு விரைவில் சவூதி செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 100 ஹாஜிகளுக்கு ஒரு மௌலவி நியமிக்கப்பட இருப்பதோடு இதில் முகவர்களோ,இணைப்பாளர்களோ வேறுதரப்பினரோ தொடர்புபட மாட்டார்கள் எனவும் இதற்கென முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,

ஹஜ் யாத்திரிகர்கள் 3 குழுக்களாக அழைத்துச் செல்லப்பட இருப்பதோடு முதலாவது குழுவில் 1200 பேரும் இரண்டாம் மூன்றாம் குழுக்களில் 1150 பேரும் அடங்குவர்.

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் தொடர்பில் விரைவில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட இருப்பதோடு இதற்கென தனியான செயலி (அப்) ஒன்றும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பும் வரை சகல வித ஏற்பாடுகளையும் குறைவின்றி வழங்கவும் பிரதமருடனான சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் பின்னர் தருவித்த புதிய பஸ்களே போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட இருப்பதோடு மக்கா மற்றும் மதீனா தவிர அதிதியாக செல்வதற்கு வசதிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.

அதில் கட்டணங்கள் பெருமளவு குறைவதோடு உரிய முறையில் வசதிகளும் கிடைக்கும் என்றார். இந்த முயற்சி வெற்றியளித்தால் தொடர்ச்சியாக அரசாங்கமே ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார். (பா)

ஷம்ஸ் பாஹிம்,அஜ்வாத் பாஸி 

 

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை