கட்சியை உடைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது

வெற்றிக்காக இணைந்து பயணம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே தனது அரசியல் பயணம் தொடருமென உறுதிபடத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச, கட்சியை உடைத்து தனிக்கட்சி அமைக்கும் எண்ணம் எதுவும் கிடையாதெனவும் உறுதியளித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி மூலம் பொதுத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு முழு அளவில் பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட, தொகுதி மட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்து பேசிய அவர்:

கட்சியுடன் எனக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது. காலத்திற்கு ஏற்ற விதத்தில் கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு முரணாக ஒருபோதும் செயற்படப்போவதில்லை.

மாற்றங்கள் குறித்த எமது நிலைப்பாடுகளையே முன்வைத்து வருகிறோம். எமக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தரும் வகையிலுள்ளதால் இணைந்த பயணத்தை தொடரலாமென நம்புகின்றேன்.

மக்களுக்காகவே ஐக்கிய தேசிய கட்சி செயற்பட வேண்டும்.தனிப்பட்ட செல்வாக்குகளை கட்சிக்குள் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்சியென்பது எவரினதும் தனிப்பட்ட சொத்தல்ல.மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையிலே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.இதற்காக கிராமிய மட்டங்களிலிருந்து நடவடிக்கைகளை விஸ்தரிப்பது அவசியம். ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டுள்ளதாக இன்று சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.ஐக்கிய தேசிய கட்சியை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது.தனித்துப் பயணிக்கும் நோக்கமும் எம்மிடம் இல்லை.

பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியூடாக தேர்தலைச் சந்திப்பதே எமது திட்டம்.ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு கிடைத்த ஐம்பத்தைந்து இலட்சம் வாக்குகளுடன் இப்போது அரசுடன் முரண்பட்டுள்ள ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியீட்டவுள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான மனோக ணேசன்,பாட்டலி சம்பிக்க ரணவக, தயாகமகே, சந்திராணி பண்டாரநாயக, பழனி திகாம்பரம், சரத்பொன்சேகா, ஜே.சி.அளவத்துவல உட்பட முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.எம்.நிலாம்

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை