கொரோனா பரவுவதை தடுக்க பல்துறை நிபுணர் குழு

பொதுமக்கள் ஒத்துழைப்பை கோருகிறது அரசு

இலங்கையில் எவருக்கும் பாதிப்பில்லை

நாட்டில் கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு நேற்று பணிப்புரை வழங்கியதுடன் அதற்கிணங்க விசேட பல்துறைசார் குழுவொன்றை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று உடனடியாக நியமித்துள்ளார்.

அக் குழு இன்றைய தினம் பிற்பகல் 5 மணிக்கு சுகாதார அமைச்சரின் தலைமையில் சுகாதார அமைச்சில் கூடி சுகாதாரதுறை ரீதியாக கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய செயற் திட்டங்கள் தொடர்பிலும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும்ஆராயவுள்ளன.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் தீவிர பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வரும் விமானப் பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவில் இவ் வைரஸ் பாதிப்பினால் இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பெரும்பாலானோர் குறித்தநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாக பெரும்பாலானோர் இந்த நோய்க்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹொங்கொங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, நேபாளம், தாய்வான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவருகிறது.

இந்தியாவில் கேரளா உட்பட நான்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் 11 பேர் அது தொடர்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐ. டி. எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க நாட்டில் இதுவரை கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயின் அறிகுறியாக காய்ச்சல், இருமல், சளி அடைத்தல், சுவாசம் கஷ்டமாதல், வயிற்றோற்றம், தலைவலி, தொண்டை வலி, உடல் சோர்வு என்பவற்றை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கிணங்க நியூமோனியா, சுவாசம் அசெளகரியமாதல், சிறுநீரகம் செயலிழத்தல் ஆகியன இடம்பெற்று நோயாளர் மரணம் அடைவதற்கும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் மேற்படி அறிகுறிகள் தென்படுவோர் உடனடியாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேற்படி நோய் வராமல் தடுக்கும் வகையில் உணவிற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுதல், மலசல கூடங்களை உபயோகித்த பின்னர் சுத்தம் பேணுதல்,வளர்ப்பு பிராணிகளை தொடுதல் மற்றும் சிறு பிள்ளைகளை அவற்றோடு விளையாட விடுதலின் பின்னர் சுத்தமாக கைகளைக் கழுவுதல் முக்கியமாகும். சவர்க்காரம் அல்லது கிருமி நாசினிகளை பாவித்து கைகளை கழுவுவது சிறந்ததாகும்.

அடிக்கடி கை கழுவுதல் மற்றும் இருமல் வரும் வேளைகளில் கைக் குட்டைகளை பாவித்தல் சிறந்ததென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் சளி நோயாளர்களுடன் பழகுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர்களோடு நெருக்கமாக பழக நேர்ந்தால் கண், மூக்கு, வாய் அனைத்தையும் மூடியவாறு மூக்கு கவசமொன்றை அணிந்துகொள்ளுமாறும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை உணவிற்காக பயன்படுத்தும் முட்டைகள், இறைச்சி வகைகளை நன்றாக கழுவிய பின்னர் உணவிற்கு பயன்படுத்துமாறும் விலங்குப் பண்ணைகள் மற்றும் அதற்கு அருகாமையில் தொழில் புரிவோர் மாஸ்க் ஒன்றை அணிந்துகொள்வது அவசியம் என்றும் கைகளுக்கு கையுறை அணியுமாறும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள ஷவான் நகரில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இலங்கை தூதரகம் கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சீனாவிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் ஹுபேய் மாகாணத்திலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் மூலம் வழங்கி வருகிறது.

ஆரம்பத்தில் 85 இலங்கை மாணவர்கள் ஹுபேய் மாகாணத்தில் இருந்தனர். எனினும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து அவர்களில் பலர் விடுமுறைக்காக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை