சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக இன்று எம்முடன் சிலர் இணைய முயற்சி

சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக எம்முடன் இணைய இன்று முயற்சிக்கின்றனர். அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் தோல்வியைத் தழுவுவர். அதன் பின் அவர்களுக்கு எமது கதவுகள் திறந்திருக்கமாட்டாதென வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மக்களின் கவனம் எம்மை நோக்கி இருப்பின் அர சின் கவனமும் அவர்ளை நோக்கியதாக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மேலும் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-, தமிழ் டயஸ்போராக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற  சந்திரிக்கா குமாரதுங்க முயற்சி எடுத்தாலும் டயஸ்போராக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நாம் இடமளிக்க வில்லை.

மத்திய அதிவேக வீதி அபிவிருத்திசெய்யப்பட்ட பிறகு யாழ்ப்பாணத்திற்கான அதிவேக வீதி அபிவிருத்தி செய்யப்படும்.

கண்டி-கொழும்பு அதிவேக வீதி இன்னும் இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார்.

கண்டி -_ கொழும்பு அதிவேக வீதி மூன்று கட்டங்களாக நிறைவு செய்யப்படுவதுடன் அவற்றின் இரண்டு கட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்கு ருவன்புர அதிவேக வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் பிறகு குருநாகலிலிருந்து தம்புள்ள வரை அதிவேக வீதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

கண்டி நகர வாகன நெரிசலைக்குறைக்க கண்டி வில்லியம் கொபல்லாவை மாவத்தையிலிருந்து தென்னங்கும்புறை வரையில் 5.5 கிலோமீட்டர் சுரங்க வழிப்பாதை ஒன்று அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வாகன நெரிசலைக் குறைக்கும் வேறு திட்டங்களும் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு தந்திரோபாயங்கள் ஊடாக சட்டத்தின் பிடியிலிருந்து தற்காலிகமாக​ வெளியே வந்துள்ளார். ஆனால் சரியான விசாரணைகளின் முடிவில் அவர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.

சிலர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக எம்முடன் இணைய முயற்சிக்கின்றனர். அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் தோல்வியைத் தழுவுவர். அதன் பின் அவர்களுக்கு எமது கதவுகள் திறந்திருக்கமாட்டாது.

 

அக்குறணை குறூப் நிருபர்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை