டிரம்ப்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் வெளியீடு

பலஸ்தீனர்கள் நிராகரிப்பு

நீண்ட கால காத்திருப்புக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஜெரூசலம் இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக நீடிக்கிறது.

அவரது முன்மொழிவில் சுதந்திர பலஸ்தீன நாடு ஒன்று பற்றி கூறும் அதேவேளை மேற்குக் கரையில் உள்ள குடியேற்றங்களில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார். இந்தத் திட்டம் பலஸ்தீனர்களுக்கான கடைசி சந்தர்ப்பம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனை ஒரு ‘சதி’ என குறிப்பிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தார்.

“ஜெரூசலம் விற்பனைக்கு அல்ல, எமது அனைத்து உரிமைகளும் விற்பனைக்கு அல்ல மற்றும் பேரம் பேசுவதற்காகவல்ல என்று டிரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் நான் கூறிக்கொள்கிறேன். உங்களது திட்டம், சதி நிறைவேறாது” என்று மேற்குக் கரையின் ரமல்லாவில் இருந்து தொலைக்காட்சி ஒன்றில் அப்பாஸ் தெரிவித்தார்.

உலகின் மிக நீண்ட பிரச்சினைக்கான இந்த தீர்வு அவணம் ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னரில் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான காசா பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேல் மேலதிக துருப்புகளை குவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகும் உள்நாட்டில் அரசியல் சவால்களை எதிர்நோக்கி இருக்கும் நிலையிலேயே இருவரும் இந்தக் கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க செனட்டில் டிரம்ப்புக்கு எதிராக பதவி நீக்க விசாரணை இடம்பெற்று வருவதோடு நெதன்யாகு தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்ட விலக்குக் கோரியுள்ளார். இந்த இருவரும் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர். எனினும் இந்தத் திட்டம் வெளியிடப்பட்டதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பிரைட்மன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்தின் பின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் 30 வீதமான பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் நடத்தும் அறிவிப்பை நெதன்யாகும் வெளியிட்டார். மேற்குக் கரையில் உள்ள குடியேற்றங்களில் 400,000க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கருதப்படுகின்றபோதும் இஸ்ரேல் அதற்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

“அமைதியை நோக்கி இஸ்ரேல் இன்று பெரிய படியை எடுத்து வைத்துள்ளது” என்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“இரு தரப்புக்கும் வெற்றியை பெற்றுத்தருவது மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பலஸ்தீன நாட்டின் அச்சுறுத்தலை தீர்த்து இரு நாட்டு தீர்வை உண்மையாக்குவது எனது நோக்கமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்பின் இந்தத் திட்டம் பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசுவதற்காக நெதன்யாகு ரஷ்யா பயணிக்கவிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசா பகுதியில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸும் இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது. “டிரம்பின் அறிவிப்பு ஆக்ரோசமானது, அது ஆத்திரத்தை தூண்டும்” என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானங்கள், சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு உடன்பாடுகள் அடிப்படையிலான அமைதி உடன்படிக்கை ஒன்றையே ஐ.நா விரும்புகிறது என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரஸ்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வரும் சனிக்கிழமை அரபு லீக் அவசர சந்திப்பு ஒன்றை நடைத்தவுள்ளது.

டிரம்பின் திட்டத்தின் முக்கிய முன்வரைவுகள்,

n எந்த பலஸ்தீனரும், இஸ்ரேலியரும் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட மாட்டார்கள். அதாவது, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை.

n இஸ்ரேலின் பகுதியாக டிரம்ப் கூறும் திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தின் மீது இஸ்ரேலுக்கு உள்ள இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்திய ரீதியிலான சமரசங்களைக் காட்டுவதாக டிரம்ப் தெரிவிக்கும் ஒரு கருத்துரு வரைபடமும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும்.

n பலஸ்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெரூசலத்தில் ஒரு தலைநகரை இந்த வரைபடம் அளிக்கிறது. இங்கு அமெரிக்கா தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தில் 15 வீதத்துக்கு மேலாக பலஸ்தீனர்களுக்கு கட்டுப்பாடு கிடைப்பதாக தெரிவித்துள்ளது.

n ஜெரூசலம் ‘பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்’. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெரூசலம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1967 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பலஸ்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை