சீன வைரஸினால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு

பிரஜைகளை வெளியேற்றியது அமெரிக்கா, ஜப்பான்

சீனாவில் புதிய கோரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் அந்த வைரஸ் மையம் கொண்டிருக்கும் வுஹான் நகரில் இருந்து அமெரிக்கா மற்றும் ஜப்பான் பிரஜைகள் நேற்று வெளியேற்றப்பட்டனர். மத்திய கிழக்கிலும் இந்த வைரஸ் தொற்றிய முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்தும் திறன் சீனாவிடம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வெளிட்டிருந்தபோதும், வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 5,974ஆக அதிகரித்துள்ளது.

சுவாசப் பிரச்சினையை எற்படுத்தும் இந்த வைரஸினால் புதிதாக மேலும் 26 பேர் உயிரிழந்திருப்பதோடு பெரும்பாலும் அனைத்து உயிரிழப்புகளும் வுஹானை தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஹுவான் நகரில் இருக்கும் வனவிலங்குச் சந்தை ஒன்றில் இருந்து கடந்த மாதம் இந்த வைரஸ் பரவியதாக நம்பப் படுகிறது. இதனால் இந்த மாகாணத்தில் இருக்கும் சுமார் 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

“நிலைமை வேகமாக மாறிய நிலையில் அங்கே நான் சிக்கிக் கொள்வேனோ என்று அதிகம் பயப்பட்டேன்” என்று வுஹானில் இருந்து பிரத்தியேக விமானத்தில் டோக்கியோ வந்தடைந்த டகியோ அவுயாமா குறிப்பிட்டார். அந்த நகரில் இருந்து 206 பிரஜைகள் அழைத்து வரப்பட்ட நிலையில் வான் வழியாக மேலும் பலரை அழைத்துவர ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று அமெரிக்கா பிரத்தியேக விமானத்தை அனுப்பி வுஹான் நகரில் இருந்து 220 தனது நாட்டு பிரஜைகளை அழைத்துக்கொண்டுள்ளது. இவர்களில் 50 அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களும் உள்ளனர்.

சீனாவில் இருந்து திரும்பிய 600 பிரஜைகளை தனது பிரதான நிலத்தில் இருந்து 2,000 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கிரிஸ்மஸ் தீவுகளில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திருக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்லும் அகதிகளை இந்த தீவில் தடுத்துவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் வுஹான் நகரில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய குடும்பம் ஒன்றில் இருந்து முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸின் பாதிப்பு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீன பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. பல விமான சேவைகளும் சீனாவுக்கான விமானப் பயணங்களை ரத்துச் செய்திருப்பதோடு பல நிறுவனங்களும் தமது ஊழியர்களை அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

பெரும் அழிவை ஏற்படுத்தும் தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து பற்றிய அச்சம் காரணமாக சுரங்கத் துறை தொடக்கம் ஆடம்பர பொருட்கள் வரையான துறைகள் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் அடுத்த 10 நாட்களுக்கு உச்சம் பெற்றிருக்கும் என்று சீனாவின் தேசிய சுகாதார அணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் தொற்றிய சார்ஸ் வைரஸ் மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் போன்று புதிய கொரோனா வைரஸ் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே நோயுற்றிருப்பவர்களுக்கே குறிப்பாக ஆபத்தை விளைவிக்கிறது.

நோய்த் தொற்று வேகமடைந்திருக்கும் நிலையில் வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதாக அதிகாரிகள் கூறினர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை உயராது என்று சீன ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயைவிட வுஹான் வைரஸ் தொற்றின் வீரியம் குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனினும் இந்த புதிய வைரஸின் உயிர்கொல்லும் தன்மை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

சுவாச நோய் தொற்றுகள் போன்று இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மல்கள் மூலம் பரவக் கூடியதாக இருப்பதோடு அதன் நோயரும்பு காலம் ஒன்று தொடக்கம் 14 நாட்களை உடையது. நோய் அறிகுறிகளுக்கு முன்னரே நோயை பரப்பும் தன்மை கொண்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரண்டு மருத்துவமனைகள் வேகவேகமாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1000 படுக்கைகள் கொண்ட முதல் மருத்துவமனை வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இரண்டாவது மருத்துவமனை 1,600 படுக்கை வசதிகளைக் கொண்டதாகும்.

சீனாவுக்கு வெளியில் 16 நாடுகளில் சுமார் அறுபது புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகெங்கும் உள்ள விமானநிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை