லிபிய யுத்த நிறுத்தத்தில் கைச்சாத்திடாமல் ஹப்தர் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றம்

திரிபோலியில் மீண்டும் சண்டை ஆரம்பம்

உடன்பட்ட லிபிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் அந்நாட்டின் போட்டி இராணுவக் குழு தலைவர் கலீபா ஹப்தர் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளார்.

துருக்கி மற்றும் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் கடந்த திங்கட்கிழமை மொஸ்கோ நகரில் இடம்பெற்ற பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நேற்றுக் காலை இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஹப்தர் கைச்சாத்திட ஏற்பாடாகி இருந்தது. இந்த உடன்படிக்கையில் ஐ.நா ஆதரவு லிபிய அரசின் தலைவர் பயேஸ் அல் சர்ராஜ் ஏற்கனவே கைச்சாத்திட்டிருந்தார். எனினும் கிழக்கு லிபியாவை தளமாகக் கொண்டு இயங்கும் படையின் தளபதியான ஹப்தர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாமலேயே ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஹப்தர் ரஷ்யாவை விட்டு புறப்பட்டுச் சென்றதை லிபிய தரப்பு உறுதி செய்துள்ளது.

அரச படையை கலைப்பது குறித்த கால எல்லை உள்ளடக்கப்படாததால் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை ஹப்தர் நிராகரித்ததாக லிபிய இராணுவத் தரப்பு ஒன்றை மேற்கோள்காட்டி இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“இந்த ஆவணம் (உடன்படிக்கை) லிபிய இராணுவத்தின் பல கோரிக்கைகளையும் பொருட்படுத்தத் தவறியது” என்று அல் அரபியா தொலைக்காட்சி வலையமைப்புக்கு ஹப்தர் குறிப்பிட்டுள்ளார். லிபியாவில் துருக்கி மற்றும் ரஷ்யாவின் முயற்சியுடன் யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு அடுத்த தினமே ரஷ்ய தலைநகரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த பேச்சுவார்த்தையில் போர் புரியும் தரப்புகளுக்கு இடையே நேருக்கு நேர் சந்திப்பு இடம்பெறாதபோதும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ் திங்கட்கிழமை குறிப்பிட்டார். யுத்த நிறுத்த உடன்படிக்கை சாதகமாக இருப்பதாக ஹப்தர் வரவேற்றிருந்தார்.

எனினும் ஹப்தர் ரஷ்யாவில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலைநகர் திரிபோலியில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா ஆதரவு அரசிடம் இருந்து தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ஹப்தர் படை ஈடுபட்டுள்ளது.

ஹப்தர் திரிபோலி மீது கடந்த ஏப்ரலில் தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் 280 பொதுமக்கள் மற்றும் சுமார் 2000 போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இதனால் 146,000 லிபிய மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்ந்தால் ஹப்தருக்கு துருக்கி பாடம் கற்பிக்கும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரித்துள்ளார்.

லிபியாவின் நீண்ட காலத் தலைவரான முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட 2011 சிவில் யுத்தத்திற்கு பின்னர் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டில் தற்போது இரு போட்டி அரசுகள் இருப்பதோடு இரண்டு அரசுகளுக்கும் பல்வேறு வெளிநாட்டு சக்திகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில் ஐ.நா ஆதரவு அரசுக்கு உதவியாக துருக்கி தமது துருப்புகளை லிபியாவுக்கு அனுப்பி இருப்பதோடு ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து போன்ற நாடுகள் ஹப்தர் தரப்புக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை