அகில இலங்கை பாடசாலை கிரிக்கெட் சம்பியனான பொத்துவில் மத்திய கல்லூரி அணிக்கு வாழ்த்து

கல்வி அமைச்சு கடந்த 2019ம் ஆண்டு நடாத்திய, அகில இலங்கை பாடசாலை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனாக வெற்றிவாகை சூடிய பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அணியினர், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தினால் பாராட்டி, பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 2019 தேசியமட்ட இணைப்பாடவிதான போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றியீட்டிய, அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலை மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்

(திட்டமிடல்) ஏ.ஜி.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். கல்வி அமைச்சு 2019ம் ஆண்டு நடாத்திய, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்; போட்டியின் இறுதிப் போட்டியில், பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினர், மட்டக்களப்பு மெதடிஸ்;த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினரை வெற்றி கொண்டு தேசியமட்ட சம்பியனாக வெற்றிவாகை சூடினர். இப்போட்டி, கிரியுள்ள விக்கிரமசீலா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில், பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அணியின் 14 வீரர்கள் பதக்கம், பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதாக கல்லூரி அதிபர் கே.ஹம்ஸா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாணவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் எம்.முகம்மட் அஸ்மியும் கலந்து கொண்டார்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை