சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஹர்சிகாவுக்கு பாராட்டு!

இந்த விளையாட்டு விழாவில் மகளிருக்கான பளுதூக்கல் நிகழ்ச்சியில் யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி பயிலும் ஹர்சிகா விஜய பாஸ்கர் வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்து தனது பாடசாலைக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார்.

தனது 13ஆது வயதிலேயே பளுதூக்குவதில் ஈடுபட ஆரம்பித்தார் ஹர்சிகா. 14ஆவது வயதில் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிகளில் கலந்துகொண்டார். 15 ஆவது வயதில் தேசிய பாடசாலைகள் மட்ட போட்டிகளில் தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றார். யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் பளுதூக்கல் போட்டிகள் பலவற்றில் ஹர்சிகா பல தடவைகள் முதலாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

2016 இல் மலேசியாவில் நடைபெற்ற இளையோர் பொதுநலவாய போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹர்சிகா அங்கு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

அதனையடுத்து தேசிய மட்ட பகிரங்க பளு தூக்கல் போட்டிகளில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில் இவர் தங்கப்பதக்கங்களை வென்றதுடன் ஒரு தேசிய சாதனையையும் 2 போட்டிக்கான சாதனைகளையும் நிலைநாட்டினார். அத்துடன் 20 வயதுக்குக் குறைந்த 63 கிலோ பாரப்பிரிவில் 3 சாதனைகளையும் நிலைநாட்டினார்.

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹர்சிகா பளு தூக்கல் போட்டியில் 64 கிலோ பாரப் பிரிவில் போட்டியிட்ட ஹர்சிகா ஒரே தடவையில் பளுவை தூக்கி நிற்கும் Stanet முறையில் 70 கிலோவையும் அதனை தலை மேல் உயர்த்திப் பிடிக்கும் இரண்டாவதான Clean R Jerk முறையில் 100 கிலோவையும் மொத்தமாக 173 கிலோ பளுவைத் தூக்கியிருக்கிறார். இது அவருக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத்தந்தது.

ஹர்சிகாவை அவரது தந்தையாரான விஜயபாஸ்கரே பயிற்றுவிக்கிறார். ஹர்சிகாவின் தந்தை விஜயபாஸ்கரும் ஒரு பளு தூக்கும் வீரராவார். மத்தியமட்ட போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். அத்துடன் கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர்.

ஹர்சிகாவின் மூத்த சகோதரரான விஜய சங்கரும் ஒரு பளு தூக்கல் வீரர். இவர் மத்தியமட்ட பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கமும் பகிரங்க சிரேஷ்ட தேசிய மட்ட போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் பெற்றவர்.

பளுதூக்கல் போட்டிகளில் ஈடுபடுவோர் தமது உடல் நிலையை தொடர்ந்து பேணிவர வேண்டியது அவசியமானதாகும். கட்டுப்பாடு, அர்ப்பணிபபு மற்றும் திடசங்கற்பத்தின் மூலமே இதனை மேற்கொண்டு வரமுடியும். இவ்வாறான ஒழுக்க விழுமியங்கள் மூலமே ஹர்சிகா தனது உடல் நிறையை தொடர்ந்தும் பேண முடிகிறது.

உணவை அளவாகவும் சீராகவும் எடுத்துக்கொள்வது முதல் சீரான பயிற்சிகளை மேற்கொள்வது பளூ தூக்கல் வீரர்களுக்கு மட்டுமன்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவசியமாகும். அத்துடன் ஒரு போட்டியில் பங்கேற்கும் போது தான் வெற்றி பெறப்போவதாக திடசங்கற்பம் பூணவேண்டும். அப்போதுதான் வெற்றிக்குத் தேவைப்படும் உந்து சக்தியை வழங்க உடல் ஒத்துழைக்கும்.

மேற்படி ஒழுக்க விழுமியங்கள் மூலம் ஹர்சிகாவுக்கு கிடைத்த வெற்றி அவரது குடும்பம் பாடசாலை மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமன்றி இந்த நாட்டுக்குக் கிடைத்த பெருமையாகும்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவியாக ஹர்சிகா சர்வதேச மட்ட போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 1980 இல் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவியாக இருந்த செல்வகௌரி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடைதாண்டி ஓடுவதில் வெள்ளிப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை