அயர்லாந்துடனான பரபரப்பான போட்டியில் வெற்றியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள்

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் திரில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2--0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

பார்படோஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயந் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் 63 ஓட்டங்களையும், சிமி சிங் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரெல் 3 விக்கெட்டுகளையும், கெரி பியர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 234 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 52 ஓட்டங்களையும், ஹெய்டன் வோல்ஷ் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும், கிரன் பொலார்ட் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், சிமி சிங் 3 விக்கெட்டுகளையும், என்டி மெக்பிரைன் மற்றும் பெரி மெக்கார்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், போய்ட் ரென்கின் மற்றும் மார்க் அடாயர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அல்சார்ரி ஜோசப் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை மறுதினம் கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள அயர்லாந்து அணி, அடுத்ததாக ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இந்த ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை