ஊவா ஹய்லன்ஸ் தோட்டத்தில் இனம்தெரியாத கும்பல் தாக்குதல்

ஐவர் காயம், மூவர் கைது

ஊவா ஹய்லன்ஸ் பெருந்தோட்டத்திற்குள் நுழைந்த இனம்தெரியாத கும்பலொன்று தோட்ட மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது குறித்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இத்தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்ற வகையில் ஐவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் க.பொ.த. உயர்தரப் பெறுபேற்றினை எதிர்நோக்கியிருந்த மாணவன் ஒருவனும் அடங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஹய்லன்ஸ் எல்லவெல தோட்டப்பிரிவிற்குள் புகுந்த குறித்த கும்பலை சேர்ந்தவர்கள் தோட்ட மக்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதுடன், தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.

எதிர்பாராதவிதமாக இச் சம்பவம் இடம்பெற்றதினால், தோட்ட மக்கள் பெரும் பதற்றத்துடனும், பீதியுடனும் காணப்படுகின்றனர்.

இது குறித்து, தோட்ட மக்கள், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷூக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சென்று, தோட்ட மக்களிடம் சம்பவம் குறித்த விடயங்களை அறிந்துகொண்டதுடன், தோட்ட முகாமையாளர் மற்றும் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இச்சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளனர். எல்லவெல தோட்டப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு, பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளார்.

தாக்குதலில் காயமுற்ற மாணவனொருவன் உள்ளிட்ட ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர் 

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை