இலங்கை தங்கமழை: முப்பாய்ச்சலில் பதக்கம் வென்றார் சப்ரீன் அஹமட்

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஐந்தாவது நாளான நேற்று இலங்கை மேலும் பல தங்கப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

தடகளப் போட்டிகளில் நேற்று இலங்கை மொத்தம் 4 தங்கப்பதக்கங்களை வென்றதோடு நீச்சல் போட்டிகளில் மேலும் பல தங்கப் பதக்கங்களை அள்ளியது. முப்பாய்ச்சலில் சப்ரீன் அஹமட் சர்வதேச போட்டிகளில் முதல் முறை பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

தடகளத்தில் ஆதிக்கம்

கத்மண்டு தசரத் அரங்கில் நடைபெற்றுவரும் மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று இலங்கை பல போட்டிகளிலும் சோபிக்க முடிந்தது.

ஆரம்பத்தில் நடந்த பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இலங்கையின் லக்சிகா சுகந்தி 13.64 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்போது அவர் சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.

இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற வீராங்கனையான இரேஷானி ராஜசிங்க 14.18 விநாடிகளில் போட்டியை முடித்து மூன்றாவது இடத்தை பெற்று இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று கொடுத்தார். எனினும் இரேஷானி போட்டியை சரியாக ஆரம்பிக்காததால் ஆரம்பத்தில் சற்றும் தாமதம் ஏற்பட்டது முடிவில் பாதிப்பைச் செலுத்தியது.

ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் ஓடிய ரொசான் தம்மிக்க 14.42 விநாடிகளில் போட்டியை முடித்து வெண்கலப் பதக்கமே வென்றார்.

பாகிஸ்தானின் மொஹமட் நயீம் (14.30 விநாடி) மற்றும் இந்தியாவின் சுரேந்தர் ஜயக் (14.37) முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

எனினும் 400 மீற்றர் ஆடவர் மற்றும் மகளிர் ஓட்டப்போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் முழுமையாக செல்வாக்குச் செலுத்தினர். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் டில்ஷி மஹீஷா 53.40 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற அவர் பெரிதாக நெருக்கடி இன்றி முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் இறுதி ஓட்டத்திற்கு தகுதி பெற்ற கௌஷல்யா மது ஐந்தாவது இடத்தையே பிடித்தார். இந்திய வீராங்கனை பிரியா ஹப்பதான் வெள்ளிப் பதக்கத்தையும் பாகிஸ்தானின் சஹிப் ஏஸ்ரா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

400 மீற்றர் ஆடவர் பிரிவிலும் இலங்கை வீரர்கள் ஏனைய நாடுகளை பின்தள்ளினர். 46.69 விநாடிகளில் போட்டியை முடித்த அருன தர்ஷன தங்கப் பதக்கம் வென்றதோடு லக்மால் பிரியன்த 46.79 விநாடிகளில் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் ஜீவன் கரகொப் வெண்கலப் பதக்கத்தையே வென்றார்.

இதேவேளை பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியிலும் இலங்கை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது. 13.21 மீற்றர் தூரம் பாய்ந்து ஹஷினி பிரொபோதா தங்கப் பதக்கம் வென்றதோடு விதூஷா லக்ஷானி 13.14 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய சம்பியனான கிரேசன் தனன்ஜயவை பின் தள்ளி சப்ரீன் அஹமட் வெண்கலப் பதக்கம் வென்றார். தனன்ஜய 15.91 மீற்றர் தூரம் பாய்ந்த நிலையில் சப்ரீன் 15.95 மீற்றர் தூரம் பாய்ந்தார். இதில் இந்தியாவின் கார்த்திக் அன்னிக்ரி 16.47 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் மொஹமட் சலாஹ் 16.16 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

அண்மைக்காலமாக தேசிய போட்டிகளில் சோபித்து வரும் சப்ரீன் சர்வதேச பதக்கம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும்.

இதன்படி நேற்று நடைபெற்ற ஆறு தடகளப் போட்டிகளில் இலங்கையால் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

வுஷு, பளுதூக்கல், நீச்சல் போட்டிகளிலும் தங்கக் குவியல்

வுஷு போட்டிகளில் எம்.எல்.என்.டீ.எஸ் குணசேகர இலங்கைக்கு மற்றொரு தங்கத்தை வென்றுதந்தார். பெண்களுக்கான டைஜிஜியாங் பிரிவில் அவர் 18.66 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். நேபாள் வீராங்கனை மீனா கிளன் வெள்ளி வென்றார்.

இது தவிர வுஷு போட்டிகளில் நேற்று இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

அதேபோன்று பளுதூக்கல் போட்டியிலும் இலங்கை மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றது. டிலன்க இசுரு குமார 55 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோன்று 61 கிலோகிராம் எடைப்பிரிவில் திலங்க விராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நேற்று ஆரம்பமான நீச்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை மத்தியு அபோசிங்க வென்றுகொடுத்தார். அவர் ஆண்களுக்கான 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் 1:48.92 நிமிடத்தில் போட்டியை முடித்து முதலிடத்தைப் பிடித்தார்.

அதேபோன்று ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சலோட்டப் போட்டியிலும் மத்தியு அபோசிங்க மற்றொரு தங்கத்தை வென்றார்.

மத்தியு அபோசிங்க 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 11 தங்கப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆண்களுக்கான ​4x400 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றது. மத்தியு அபேசிங்க, அகலங்க பீரிஸ், ஸ்டீபன் பெரேரா மற்றும் கவிந்திர நுகவல ஆகியோர் அந்தப் பதக்கத்தை வென்றனர். எனினும் பெண்களுக்கான 4x400 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தையே வென்றது.

இலங்கைக்கு எதிராக கோல் மழை

பொகாரா நகரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கால்பந்துப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 6–0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதல் பாதியில் 4–0 என்று முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை பெற்றது. இலங்கை பெண்கள் அணி ஏற்கனவே நேபாளத்திடம் 1–0 என தோல்வியுற்ற நிலையில் பதக்கம் ஒன்றை நோக்கி முன்னேறுவது கடினமாகியுள்ளது.

மறுபுறம் இலங்கை ஆடவர் கால்பந்து அணி நேபாளத்திற்கு எதிராக கத்மண்டுவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வரவேற்று அணியான நேபாளத்துடனான இரண்டாவது போட்டியை 1–1 என சமநிலையில் முடித்துக் கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நேபாளம் பெனால்டி மூலம் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் ஜூட் சுமன் மேலதிக நேரத்தில் பெற்ற அபார கோல் மூலம் இலங்கை போட்டியை சமநிலை செய்தது.

மாலைதீவுக்கு எதிரான முதல் போட்டியையும் சமநிலை செய்த நிலையில் இலங்கை அணி பதக்கம் ஒன்றை வெல்வதற்கு தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டி உள்ளது.

கிரிக்கெட்டில் முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் மற்றொரு தங்கப் பதக்க எதிர்பார்ப்பான ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி மாலைதீவு அணியை நேற்று எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை விளாசியது. கமிந்து மெண்டிஸ் 54 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை விளாசினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய மாலைதீவு அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களையே பெற்றது. இதன்மூலம் இலங்கை இளம் அணி 98 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்படி இலங்கை அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வென்று தங்கப் பதக்கத்திற்காக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

நேற்று மாலைவரை இலங்கை 17 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழு நாடுகள் பங்கேற்றிருக்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 6ஆவது நாளான இன்றும் தடகளம், நீச்சம், பளுதூக்கல் மற்றும் பூப்பந்துப் போட்டிகளில் இலங்கை மேலும் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்திலிருந்து எம்.எஸ்.எம்.பிர்தௌஸ்

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை