மழையுடனான காலநிலை தொடரும்

17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிகை

*9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிப்பு

*ஐந்து மாகாணங்களில் 24 மணி நேரம் கடும் மழை

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என்பதுடன், 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாவும் அதிகூடியதாக மட்டக்களப்பில் 219 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டையிலும் நள்ளிரவு வரை 24 மணித்தியாலத்தில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும் சீரற்ற காலநிலையானது அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் (காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில்) மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடி, மின்னல், மழையுடனான காலநிலை தொடர்வதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாடு முழுவது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும், மழையுடனான வானிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பிரகாரம் அரசாங்கத்தின் துறைசார் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தின் பிற்பகுதி முதல் நாட்டில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. நாட்டின் கிழக்கு மற்றும் தென்பகுதிகள் அதிகமாக வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து வருகின்றன. அத்துடன், மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 6,738 குடும்பங்களைச் சேர்ந்த 22,784 பேரும், வடமாகாணத்தில் 507 குடும்பங்களைச் சேர்ந்த 1,551 பேரும், சம்பரகமுவ மாகாணத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 174 பேரும், மத்திய மாகாணத்தில் 248 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,261 குடும்பங்களைச் சேர்ந்த 4,036 பேரும், வட மத்திய மாகாணத்தில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 616 பேரும், ஊவா மாகாணத்தில் 161 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேரும், தென் மாகாணத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

11 வீடுகள் முழுமையாகவும், 358 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், 4 பேர் மரணமாகியுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணாக 1,000இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை