புற்றுநோய் மருந்துகள் உடன் கொள்வனவுக்கு ஒரு பில்லியன் ரூபா

அவசரமாக ஒதுக்கியது திறைசேரி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளை உள்ளூரிலேயே கொள்வனவு செய்துகொள்வதற்கு சுகாதார அமைச்சு திறைசேரியில் இருந்து 1 பில்லியன் ரூபா நிதியை விடுவித்துள்ளது.

அபேக்ஷா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்காக தேவைப்படும் 24 அத்தியாவசிய மருந்துவகைகள் தொடர்பாக அந்த வைத்தியசாலை சுகாதார அமைச்சிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்தே மேற்படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவரது நிர்வாகத்தின்போது மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பாக தகவல்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என்று எச்சரித்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வசந்த திசாநாயக்க அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து புதிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இது தொடர்பாக திறைசேரியின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மருந்து தட்டுப்பாட்டை சீர்செய்ய திறைசேரியில் இருந்து 1 பில்லியன் ரூபா நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் தேவைப்படும் மருந்து உள்ளூரிலேயே கொள்வனவு செய்யப்படும்.

அதேநேரம் தேவைப்படும் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏற்கனவே கடன் விண்ணப்ப கடிதங்களை திறந்துள்ளதாகவும் அந்த மருந்துகள் விரைவில் இலங்கைக்கு வந்துசேரும் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை