இலங்கைக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை

பிரிட்டனில் பிரிகேடியர்  பிரியங்கவிற்கு எதிரான தீர்ப்பு

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இலங்கைக்கு இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்திற்காக எவரும் நிதி சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை கையாண்டு வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் அநுராதபுரத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள அபராதம் தொடர்பாக எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இலங்கை இராணுவம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. அதற்கான நிதி சேகரிப்பதற்கு எந்தவித தேவைப்பாடுகளும் இல்லை. வெளிவிவகார அமைச்சு இதற்காக முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்கு முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்கள் கழுத்தை அறுக்கும் சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தபோதும் இராஜதந்திர சிறப்பந்தஸ்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் வழங்கப்பட்டது.

அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுன்ஸ் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை