மதநிந்தனை குற்றச்சாட்டில் பாக். பேராசிரியருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டத்தின் கீழ், கல்லூரிப் பேராசிரியர் ஜுனைத் ஹபீஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

சமூக ஊடகத்தில் முஹமது நபியை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டதாக 33 வயது ஹபீஸ் 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டு தீவிரமான ஒன்றாக பார்க்கப்படுவதோடு, இந்த விவகாரம் கடும்போக்காளர்களினால் இலக்கு வைக்கப்படுன்றதாகவும் உள்ளது. ஹபீஸ் சார்பில் வழக்கில் ஆஜரான ரஷீட் ரஹ்மான் என்ற வழக்கறிஞர் 2014 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏனைய கைதிகளால் அடிக்கடி தாக்கப்படுவதால் ஹபீஸ் தனிமைப்படுத்தப்பட்ட சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

ஹபீஸ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முல்தான் மத்திய சிறை நீதிமன்றம் ஒன்றின் மூலமே அவர் மீதான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பட்டப் பின்படிப்பை பெற்ற ஹபீஸ் பாகிஸ்தான் திரும்பியபின் முல்தானில் உள்ள பஹாவுத்தீன் சக்கரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட ஹபீஸின் ஆலோசகர், இதற்கு எதிராக மேன்முறை செய்யப்போவதாகவும் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.

எனினும் இந்தத் தீர்ப்பை அடுத்து தமது சகாக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளியிட்ட அரச தரப்பு வழக்கறிஞர்கள் “அல்லாஹு அக்பர்” மற்றும் “மதநிந்தனையாளன் ஒழிக” என்று கோசம் எழுப்பினர்.

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவுக்கு அங்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தப் பிரிவை நீக்க முயன்ற முன்னாள் சிறுபான்மை நலத் துறை அமைச்சார் ஷாபாஸ் பட்டி, பஞ்சாப் ஆளுநராக இருந்த சல்மான் தஸீர் உள்ளிட்டோர் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலைகளை பெரும்பாலானவர்கள் வரவேற்றனர்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை