தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப கட்சியை எவரும் வழிநடத்த முடியாது

சகலரும் ஒன்றுபட்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகுங்கள்

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைய கட்சியை வழிநடத்த எவருக்கும் இடமளிக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக்கட்சி நிருவாக மாற்றம் தொடர்பில் கூடிய விரைவில் தீர்மானிக்கப்படுமெனவும் அதுவரை பொறுமையுடன் செயற்படுமாறும் அவர் கோரியுள்ளார். குழுக்களாக பிளவுபடாமல் இணைந்து செயற்படுவதன் மூலமே நாம் மீண்டெழ முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுமுறையைக் கழிக்க இந்தியா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடு திரும்பிய கையோடு கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கட்சி முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அடுத்து வரக்கூடிய ஓரிரு மாதங்களுக்கிடையில் கட்சியை முழுமையாக மறுசீரமைக்க எண்ணி இருப்பதாகவும் அதன்பின்னர் தான் ஓய்வு பெற எண்ணி இருப்பதாகவும் கூறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, உரிய நேரத்தில் பொறுத்தமான தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியாது. படிப்படியாகவே மாற்றங்களைச் செய்ய முடியும் எனவும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.

கட்சியையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எமது நோக்கம். தனி நபர்களுக்காக கட்சியை பாழ்படுத்த இடமளிக்க முடியாது என்பதையும் இங்கு அவர் வலியுறுத்தியிருக்கின்றார். வரக்கூடிய தேர்தலோடு சிரேஷ்டமான பலர் ஒதுங்கிவிடுவார்கள். அதில் நானும் ஒருவன்தான் எனக் கூறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

கட்சி யாப்புக்கமைய ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுமெனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கடந்த காலத்​ைத மறந்து செயற்படக்கூடாது எனவும் எடுத்துரைத்துள்ளார். கட்சி யாப்புக்கு முரணாக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் ரணில் எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடு திரும்பியதும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நேற்று அது இடம்பெறவில்லை. பெரும்பாலும் இன்று அல்லது நாளைய தினம் கட்சியின் புதிய செயற்குழு கூடியதன் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறலாமென தெரியவருகின்றது.

இதேவேளை நேற்றுமாலை முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போது, கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகி சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டுமெனவும் இதனைச் செய்யத் தவறினால் பொதுத் தேர்தலை தாம் மாற்றுவழிமூலமே எதிர்கொள்ள வேண்டிவரும் எனத் தெரிவித்தார்.

புதியகட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா எனக் கேட்ட போது இதுவரையில் அவ்வாறான எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். கட்சியை சீர்குலைக்கும் எண்ணம் எம்மிடம் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை