இன, மத வேறுபாடுகளால் நாடு பின்னோக்கியே பயணிக்கும்

நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகின்றபோதும் இன மற்றும் மத வேறுபாடுகள் காரணமாக நாடு பின்னோக்கியே பயணிப்பதாகவும், இன, மத வேறுபாடுகளைக் களைவதன் ஊடாகவே நாட்டில் சௌபாக்கியத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித் தொகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ‘பாராளுமன்ற ஊழியர்களின் நலன்புரி மற்றும் விசேட வேலைத்திட்ட குழு’ இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

700ற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித் தொகைகள் இங்கு வழங்கப்பட்டன.

உலகத்துக்கு முன்னுதாரணமாக பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தன்னால் முடிந்திருப்பதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற குழுக்கள் ஊடகங்களுக்கு திறக்க முடிந்தமையானது தனது பதவிக்காலத்தில் கிடைத்த வெற்றியென்றும், எதிர்காலத்தில் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்ற 21வது ஆசிய மாஸ்டர்ஸ் சம்பியன்சிஷிப் தடக்களப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாராளுமன்ற ஊழியர் பிரியந்த விக்ரமசேகர தனக்குக் கிடைத்த பதக்கங்களை சபாநாயகரிடம் காண்பித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பதவியணி தலைமையதிகாரியுமான நீல் இத்தவெல, உதவி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர (நிர்வாகம்), உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக (சட்டவாக்கம்), பாராளுமன்ற திணைக்கள பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை