சிரேஷ்ட தலைவர் என்பதாலேயே அனுமதியை வழங்கினோம்

பிழையான முன்னுதாரணமாகிவிடும் ; தவறைத் திருத்த வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் சபாநாயகரின் யோசனைக்கமையவே விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் பூரண வசதிகளுடன் கூடிய உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பெற்றுக் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரத்துடன் பாராளுமன்ற விவகார அமைச்சர் என்ற ரீதியில்தான் இவ்வீடு பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் இதனை பொது நிருவாக அமைச்சுக்குத் தெரியப்படுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரையில் இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்தத்தக்க கூடிய வகையிலேயே அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு-07 , மஹகம சேக்கர மாவத்தையில் பீ.12 இலக்கத்தையுடைய இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்டதென கூறப்பட்ட போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த காலத்தில் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக அமைந்திருக்கவில்லையென கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு பிரத்தியேகமானதொரு வாசஸ்தலமாகவே அவ்வீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கடமை புரிவதற்கு ஐந்து ஊழியர்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் வீடு மற்றும் அதன் வளாகப் பகுதியின் பராபரிப்பு போன்ற செயலினங்கள் பாராளுமன்ற விவகார அமைச்சினூடாக செலவிடப்படுகின்றது பொது நிருவாக அமைச்சு இதில் தொடர்புபடவில்லை.

இந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் KX 2330 மற்றும் KO6339 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு வாகனங்களும் அவருக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான எரிபொருளாக மாதாந்தம் 600 லீற்றர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிமாருக்குமே அரசு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக் கொடுக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கோ, கட்சித் தலைவர்களுக்கோ இது காலவரை உத்தியோகபூர்வ இல்லங்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவும் இது கடந்த அரசாங்கத்தின் தவறான முன்மாதிரியெனவும் அமைச்சர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பொது நிருவாக, மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில் முன்னைய அரசின் தவறான முன்மாதிரி எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்குக் காரணமாக அமையலாம் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். என்றாலும் இது அமைச்சரவைத் தீர்மானமாக இருப்பதால் தம்மால் செலவும் செய்ய முடியாதிருப்பதாகவும் மற்றொரு அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலமே அதனை மாற்றியமைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அடுத்த வாரம் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்க எண்ணி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை