ராஜித தலைமறைவு; சி.ஐ.டி இருப்பிடங்களில் தேடுதல்

ராஜித தலைமறைவு; சி.ஐ.டி இருப்பிடங்களில் தேடுதல்

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியுள்ளதாக சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வழமையாக தங்கியிருக்கும் இடங்களில் இல்லை எனவும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 

சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்த பின்னர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு அவர் வசித்து வந்த பௌத்தாலோக மாவத்தையிலுள்ள வீட்டுக்கு நேற்று காலை சி.ஐ.டியினர் சென்றுள்ளனர். அவர் அங்கு இல்லாத நிலையில் அவர் தங்கும் வேறு மூன்று இடங்களை சி.ஐ.டியினர் பரிசோதித்துள்ளனர்.

அங்கும் அவர் இருக்காத நிலையில் அவர் அடிக்கடி சென்று வரும் வேறு சில இடங்களிலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.  அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் ஆஸ்பத்திரிகளிலும் நேற்று தேடுதல் இடம்பெற்றதாக சி.ஐ.டி அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலை பிடியாணை பிறப்பித்திருந்தது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய சி.ஐ.டி முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இது தொடர்பான உத்தரவை பிறப்பித்திருந்தார். 

வெள்ளை வான் கடத்தல், மனிதப் படுகொலை, பொய்ச் சாட்சிகளை மக்கள் மத்தியில் பரப்புதல், குற்றங்களுடன் தொடர்புள்ள இருவரை கொண்டு ஊடக மாநாடு நடத்தியமை அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வழங்கியமை அடங்கலான குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தேவைப்படுவதாக சி.ஐ.டி சார்பில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.  

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சி.ஐ.டி சார்பாக இந்த கோரிக்கையை முன்வைத்தார்.இதனை ஆராய்ந்த நீதவான் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை வழங்கினார். 

ஜனாதிபதி தேர்தலின் போது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி மேலும் இரு நபர்களுடன் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய ராஜித சேனாரத்ன, கடந்த ஆட்சியில் வெள்ளை வானில் கடத்தி கொலைகள் நடத்தப்பட்டதாக கூறியிருந்தார். இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய இருநபர்களும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு பணம் வழங்கியே இவ்வாறு பேசுமாறு ராஜித சேனாரத்ன கூறியதாக இரு சந்தேக நபர்களும் சி.ஐ.டியில் கூறியிருந்தனர். இது தொடர்பாக சி.ஐ.டி மேலதிக விசாரணைகள் முன்னெடுத்திருந்த நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Thu, 12/26/2019 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை