ராஜித சட்டத்தை மதிப்பவர்; உரிய நேரத்தில் ஆஜராவார்

வெள்ளை வான் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஊடகச்சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சட்டத்தின் முன்வர அஞ்சமாட்டார். உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுவாரென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீடத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வான் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நடத்தியிருந்தார். இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு வெள்ளை வானில் சாரதியாக கடமை புரிந்ததாக ஒருவரும், கடத்தப்பட்டதாக ஒருவரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

தம்மை கைதுசெய்ய வேண்டாமென மூன்று சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டதுடன், உடனடியாக அவரை கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபர், பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, 

ராஜித சேனாரத்ன, நீதிமன்ற செயற்பாடுகளை மீற மாட்டார். உரிய நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார். அவர் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவர். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை அவருக்கு கால அவகாசம் உள்ளது.

உரிய காலத்தில் நீதிமன்றுக்கு விளக்கத்தை அளிப்பார். நாம் சட்டத்துக்கு அஞ்சி ஓட மாட்டோம். நேரடியாக சவால்களுக்கு முகங்கொடுப்போம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Thu, 12/26/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை