குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி வீட்டு வாசல்களில் கோலம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு வாசகம் எழுதப்பட்டிருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் கோலம் வரைந்து இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பெண்கள் சிலர் நேற்று முன்தினம் காலை கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு சாஸ்திரி நகர் பொலிஸார கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். எனினும் சிலர் அந்த இடத்தில் இருந்து நகராமல் தொடர்ந்து கோலம் வரைவதில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பொலிஸார் அவர்களை கைது செய்து வானில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பொலிஸார் அவர்களை விடுவித்தனர்.

எனினும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து போராடிய 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோலம் வரைந்து போராடியதற்காக பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். அவர் வெளியிட்ட செய்தியில், அலங்கோல அ.தி.மு.க. அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய 6 பேரை அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்த தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேவேளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு வாசகம் எழுதப்பட்டிருந்தது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை