மஸ்தான் எம்.பி மீது தாக்குதல் முயற்சி; பாதுகாவலர் காயம்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் மீது நேற்று முன்தினம் இரவு (29) தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது பாதுகாவலர் கையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா பாவற்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி வரும் நிலையில் பாவற்குளம் கிராமப்பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்தில் கே.கே.மஸ்தான் எம்பியும் சென்றுள்ளார்.

இதன் போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர். இதன் போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளது.

இந் நிலையில் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடிய நிலையில் காயமடைந்த பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காதர் மஸ்தான், இவ்வாறான கீழ்த்தனமான காரியங்களை கண்டு தாம் பயப்படவோ அல்லது அரசியலிருந்து பின்வாங்கவோ போவதில்லை என தெரிவித்தார். வன்னி அரசியலில் முன்னரும் இவ்வாறான மோசமான சம்பவங்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் அமைச்சர் கெளரவ நூர்தீன் மஷூர் மீதும் ஒருசமயம் இந்த இடத்தில் வைத்து இவ்வாறான கொலைவெறித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.

இந்த மோசமான செயற்பாடுகளை குறித்த காடையர்கள் இத்துடன் கைவிடவேண்டும் எனவும் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை