யாழில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு; கட்டுப்படுத்த அவசர அழைப்பு இலக்கம்

யாழில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், வீட்டு கழிவுப் பொருட்களை உரிமையாளர்கள் அற்ற காணிகளில் வீசுதல் மற்றும் இறந்த உயிரினங்களின் உடல்களை வீசுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது, மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களினால், கழிவகற்றும் நடவடிக்கைகள், குப்பைகளை வீதிகளில் போடுபவர்களுக்கு அதற்கான விழிப்புணர்வுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை எதிர்வரும் 3 வாரங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கழிவகற்றலை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டன.

பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், கழிவகற்றல் மற்றும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஆளணி பற்றாக்குறை தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதேநேரம், எதிர்வரும் 3 வாரங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கும் வகையில், டெங்கு தொடர்பான முறைப்பாடுகளை 021- 222- 5000 என்ற அவசர இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண சுகாதார பணிப்பாளர், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், உட்பட யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி தலைவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 

 

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை