அரிசிக்கு உத்தரவாத விலை; கோதுமை மா வரிக்குறைப்பு

அமைச்சரவை தீர்மானம்

சந்தையில் கட்டுப்பாடற்ற விதத்தில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் அரிசிக்கு 98 ரூபா என்ற உத்தரவாத விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் கோதுமை மாவுக்கான வரியை குறைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இத் தீர்மானங்களுக்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

அரசியின் விலையானது 100 ரூபா வரை உயர்ந்துள்ளமை தொடர்பில் கவலையடைகிறோம். 2018ஆம் 2019ஆம் ஆண்டின் பெரும்போக நெல்லை அரசியாக்கி நடுத்தர மற்றும் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் சந்தையில் விடப்பட்டுள்ளது.

என்றாலும் இந் நாட்களில் அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது.தேசிய நெல் களஞ்சிய சாலையில் உள்ள 42 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி லங்கா சதொச மூலம் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படும். அத்துடன், அரிசிக்கான உச்ச உத்தரவாத விலையாக 98 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. அத்துடன், பண்டிகைக் காலங்களில் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் நோக்குடன் கோதுமை மாவுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெரும்போக அறுவடை ஆரம்பமாகும் வரை கோதுமை மாவுக்கான இந்த வரி குறைப்பு அமுலில் இருக்கும். அதேபோன்று ஒரு சிலரால் தன்னிச்சையாக கோதுமை மாவின் விலையை நிர்ணயிக்கும் நிலையை மாற்றியமைத்து சந்தையில் போட்டித் தன்மையுடன் வெளிப்படையாக விலையை நிர்ணயிக்கும் முறைமையை ஏற்படுத்துவது குறித்து இந்தக் காலப்பகுதியில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை