மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கம்

தெற்காசிய  விளையாட்டுப் போட்டி:  

1500மீற்றர்  ஓட்டப் போட்டியில்  நிலானி ரத்நாயக்க தங்கம்

தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் முதலாவது தங்கப்பதக்கத்தை பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்நாயக்க வென்றார். அதேபோன்று பெண்களுக்கான டுவத்லோன் போட்டியில் எரங்கா துலக்ஷி தங்கப்பதக்கம் வென்றார்.

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டிகள் நேற்று (03) ஆரம்பமானது. இதில் காயத்திற்கு உள்ளான நிமாலி லியனாரச்சிக்கு பதிலாகவே 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி பங்கேற்றார்.

போட்டியை சற்று மந்தமாக ஆரம்பித்தாலும் கடைசி நேரத்தில் வேகத்தை அதிகரித்து 4:34.4 நிமிடங்களில் முடித்து அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் தேசிய சம்பியனான நிலானி இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

இதன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற கயன்திகா அபேரத்ன 4ஆவது இடத்தை பெற்று பதக்கம் வெல்லத் தவறினார்.

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் சஞ்சீவ லக்மால் 4ஆவது இடத்தையே பெற்றார்.

இதேவேளை ஓட்டம் மற்றும் சைக்கிளோட்டத்தை உள்ளடக்கிய டுவத்லோன் போட்டியை 01:05:58 மணி நேரத்தில் முடித்த எரங்கா துலக்ஷி முதலிடத்தைப் பிடித்து இலங்கைக்காக நேற்று இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றார். இதில் இரண்டாவது இடத்தை நேபாளத்தின் ஹுமி புடா மகர் பெற்றதோடு இலங்கையின் தமலி குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கங்களையே கைப்பற்றியது. ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் ஹிமாஷ ஏஷான் 10.50 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றபோதும் கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டதால் தங்கத்தை இழந்தார். இதனால் தெற்காசியாவின் அதிவேக வீரர் என்ற பட்டம் மாலைதீவு வீரர் சாதி ஹசனுக்கு கிடைத்தது. அவர் போட்டியை 10.49 விநாடிகளில் முடித்துக்கொண்டார். பாகிஸ்தானின் சமியுல்லா 10.66 வினாடிகளில் முடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் தனூஜி அமாஷா 11.82 வினாடிகளில் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு லக்ஷிகா சுகந்தி 11.84 விநாடிகளில் போட்டியை முடித்து மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். எனினும் சுகந்தி 100 மீற்றரில் சிறந்த காலத்தை பதிவு செய்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் அர்ச்சனா சுசிந்த் 11.80 விநாடிகளில் முடித்து தங்கப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்க எதிர்பார்ப்பு இருந்தபோதும் வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. ஹிருனி விஜேரத்னவை பின்தள்ளி நிலன்தி லங்கா ஆரியதாச மூன்றாவது இடத்தைப் பிடித்தார். எனினும் மரதன் ஓட்டப்போட்டியில் ஹிருனி விஜேரத்ன சோபிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் துலஞ்சி ரணசிங்க 1.69 மீற்றர் உயர் பாய்ந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்தியாவின் ஜிஸ்னா எம் மற்றும் ருபினா யாதவ் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற உயரம் பாய்தல் வீராங்கனை முதிதா மதுஷானி 1.65 மீற்றர் பாய்ந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையின் உஷான் தீவங்க 4ஆவது இடத்தையே பெற்றார். இதன்படி நேற்று இடம்பெற்ற தடகளப் போட்டிகளில் இலங்கை இரு தங்கம் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

இதேவேளை வுஷு போட்டிகளில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. பெண்களுக்கான சான் குவன் தாலோ போட்டியில் கிஹானி வத்சலா 8.55 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு ஆண்களுக்கான சான் குவன் தாலோ போட்டியில் சௌம்ய பிரபாகர வெண்கலம் வென்றார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ரி-20 கிரிக்கெட் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதன் ஆரம்ப சுற்றில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 23 வயதுக்கு உட்பட்ட இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி ஆரம்ப சுற்றில் நேபாளத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்களுக்கான பல போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. பரிதிவட்டம் எறிதல், நீளம் பாய்தல் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று மாலை வரை பதக்கப்பட்டியலில் ஐந்து தங்கப் பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தில் இருந்தது. இலங்கை 13 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 37 பதக்கங்களை வென்றுள்ளது.

போட்டியை நடத்தும் நேபாளம் 19 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 33 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நேபாளத்தில் நிலவும் குளிரான காலநிலை அந்நாட்டுக்கு சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

 

நேபாளத்திலிருந்து

எம்.எஸ்.எம்.பிர்தௌஸ்

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை