இங்கிலாந்துக்கு எதிராக வில்லியம்சன், டெய்லர் சதம்: ஆட்டம் சமநிலையில் நிறைவு

தொடரை வென்றது நியூசிலாந்து

நியூசிலாந்து- – இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமன் ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1- – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்து- – இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹமில்டனில் நடந்தது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ஓட்டங்கள் எடுத்தது. இதற்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 476 ஓட்டங்கள் குவித்தது.

101 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தலைவர் வில்லியம்சன் 37 ஓட்டங்களும், முன்னாள் தலைவர் டெய்லர் 31 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது.

வில்லியம்சனும், டெய்லரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். முதலில் வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ஓட்டங்களை தொட்டார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 21-வது சதம் ஆகும்.

அதைத்தொடர்ந்து டெய்லர் 184 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும். சிக்சர் மூலம் அவர் சதத்தை தொட்டார். 96-வது டெஸ்டில் விளையாடும் டெய்லருக்கு 19-வது சதம் ஆகும். டெஸ்டில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் அவர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதோடு போட்டி முடிந்து டெஸ்ட் டிரா ஆனது. வில்லியம்சன் 104 ஓட்டங்களும், டெய்லர் 105 ஓட்டங்களும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்தடெஸ்டில் மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் லாதம், வில்லியம்சன், டெய்லர் ஆகியோரும், இங்கிலாந்து தரப்பில் பர்னஸ், ஜோரூட் ஆகியோரும் சதம் அடித்தனர்.

இங்கிலாந்து தலைவர் ஜோரூட் இரட்டை சதம் அடித்தார். அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது.

இந்த டெஸ்ட் சமன் ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-- – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3- – 2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Wed, 12/04/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக