விமானப் பயணத்துக்கு ஆபத்தான நாடுகளில் கொங்கோ முதலிடம்

உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் அங்கு ஏற்பட்ட இரண்டு விமான விபத்துக்கள் அந்நாட்டின் விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியதால், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம், கொங்கோவின் கோமா நகரத்திலுள்ள வீடுகளில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.

விமானங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நிர்வகித்து வரும் ‘ஏவியேஷன் சேப்டி நெட்ஒர்க்’ எனும் அமைப்பின் தரவுகளின்படி, 1945ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில், ஆபிரிக்காவில் கொங்கோவிலே அதிகளவிலான விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. டி.ஆர். கொங்கோவில் அதிகளவிலான விமான விபத்துகள் நிகழ்வதற்கு அதன் வலுவற்ற விதிமுறைகள், நிலப்பரப்பு, தகுதியற்ற நிலையில் உள்ள விமானங்கள், மிகவும் பழைய விமானங்கள், அதிதீவிர மழை, புயல் உள்ளிட்ட மோசமான வானிலைகளே காரணங்களாகின்றன. டி.ஆர். கொங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவிலிருந்து அந்நாட்டில் மொத்தமுள்ள 25 மாகாண தலைநகரங்களில் வெறும் நான்கிற்கு மட்டுமே தரமான வீதிகளால் செல்ல முடியும். இதனால் உள்ளூர் விமான சேவைகள் அந்நாட்டிற்கு அவசியமாகின்றது. மேலும் இந்நாட்டிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களின் உட்கட்டமைப்பு, போக்குவரத்து உதவி, கண்காணிப்பு உபகரணங்கள் மோசமான நிலையில் உள்ளன. அபலவீனமான தொழில்நுட்பமும் இந்த விமான விபத்துக்களுக்கு காரணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை