மீண்டும் அச்சுறுத்தும் டெங்கு

இதுவரை 90 பேர் உயிரிழப்பு 86,484 பேருக்கு நோய் தாக்கம்

இவ் ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 86 ஆயிரத்து 484 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இவ் வருடம் இந் நோய்க்கு உள்ளானோரில் 44.3வீதத்தினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர் என சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் அநுர ஜயசேகர தெரிவித்தார்

வட கீழ் பருவப் பெயர்ச்சி மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு தாக்கம் சில பிரதேசங்களில் தீவிரமடைந்திருப்பதால் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான மேலுமொரு விஷேட வேலைத்திட்டத்தை நத்தார் பண்டிக்கைக்கு முன்னர் முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட டெங்கு நோய் தீவிரமடைந்திருக்கும் பிரதேசங்களில் முப்படையினரது ஒத்துழைப்புடன் சுகாதாரத் துறையினரைக் கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு நோய் தீவிரமடைந்திருப்பதால் இரண்டு நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெங்கு வைரஸ் கிருமிகளைக் காவிப் பரப்பக்கூடிய நுளம்புகள் பெருகாதபடி தெளிந்த நீர் தேங்கக் கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நத்தார் பண்டிகைக்கு முன்னர் முப்படையினரதும் ஒத்துழைப்புடன் சுகாதார உத்தியோகத்தர்களைக் கொண்டு நுளம்பு ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளளோம். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் 17ஆயிரத்து 635 பேரும், கம்பஹாவில் 13 ஆயிரத்து 290 பேரும், களுத்துறையில் 7447 பேரும், கண்டியில் 7651 பேரும், யாழ்ப்பாணத்தில் 6267 பேரும், மாத்தறையில் 3781 பேரும், இரத்தினபுரியில் 3681 பேரும் என அதிகூடியளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.

அதேநேரம் மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் இந் நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மக்களது ஒத்துழைப்பு இன்றி நுளம்பு பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

மர்லின் மரிக்கார்

 

 

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை