ரணிலின் வழிகாட்டலில் சஜித் பிரதமர் வேட்பாளர்

வெற்றி இலக்கை அடைவோம்

முதிர்ச்சி பெற்ற ஆளுமையுள்ள தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக உள்வாங்கி அடுத்த பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் வெற்றி இலக்கை அடைய முடியும் என முன்னாள் அமைச்சரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற அனுபவ முதிர்ச்சி மிக்கவர்களை வழிகாட்டிகளாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமே எமது அரசியல் பயணம் காத்திரமானதாக அமைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமே எம்மால் இந்த வெற்றிப் பயணத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்துக்கூறும் போது,

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதன் வாக்கு வங்கியை இழந்துவிடவில்லை. அதேசமயம் புதிய வாக்காளர்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ளத் தவறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் நாம் நிறுத்திய வேட்பாளர் சாமான்யமானவரல்ல. பலம்மிக்க ஒருவரையே களமிறக்கினோம்.

55 இலட்சம் வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை நாம் முற்றாக இழந்துவிடவில்லை. மாற்றுத் தரப்பு மதவாதப் பிரசாரங்களை முன்வைத்து சிங்கள பௌத்த மக்களை மூளைச்சலவை செய்து இனவாதத்தைப் பரப்பி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதன் பிரதிபலனை மிக விரைவில் மக்கள் உணர்ந்துகொள்வார்கள். இத் தோல்வியைக் கண்டு நாம் துவண்டுபோக மாட்டோம். அனைவரும் ஒன்றுபட்டு கசப்புணர்வுகளை புறந்தள்ளி கூட்டாக வரக்கூடிய பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியாகவே போட்டியிட வேண்டும்.

அதன் மூலம் நிச்சயமாக எம்மால் 113க்கு குறையாத பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியும்.

சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை பௌத்தத்துக்கு எதிரானதாக பெரும்பான்மை சமூகத்திடம் சித்தரித்துக்காட்ட முனைகின்றனர். பௌத்த சிந்தனைக்கு எதிராக ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சி செயற்படாது.

அதேசமயம் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யவும் நாம் தயாராக இல்லை. உண்மையான பௌத்தர் ஒருபோதும் இனவாதியாகச் செயற்பட முனையமாட்டார்.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாம் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் அனைவரும் ஒன்றுபடுவதன்மூலமே எமது பலம் எப்படியானது என்பதை வெளிக்காட்ட முடயும்.

தேர்தல் நடக்கவிருக்கும் காலத்தில் கட்சிக்குள் பிளவுபடாமல் நாம் ஒன்றுபடவேண்டும்.

தேர்தலை வெற்றிகொண்டதன் பின்னர் கட்சியில் தலைமைத்துவம் உட்பட முழுமையான நிருவாக மறுசீரமைப்பை செய்து புதிய தலைமுறையின் கைகளில் கட்சியை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

 

 

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை