ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றியினால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்தார்.

கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (1) மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்க்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலம் ஆகும். மஹிந்த ராஜபக்க்ஷ ஒரு தமிழின பற்றாளர். வருகின்ற வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்று தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது இது நம்மை பின்னோக்கி நகர்த்தும் என கூற விரும்புகின்றேன்.

2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர் .அன்று அரிய சந்தர்ப்பத்தில் தமிழர்கள் காப்பற்றப்பட்டனர். சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் முன்னாள் போராளிகள் அனைவரையும் காண முடிந்திருக்கமுடியாது. 30 வருட யுத்தத்தில் தமிழர்கள் அரசியல் மீது வெறுப்புற்றிருக்கின்றனர். திருமலை, அம்பாறை மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். சர்கஸ் கயிற்றில் நடப்பது போன்றுதான் அம்பாறை தமிழர்களின் நிலையாகும்.

2009ம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுப்பதற்கான இறுதிக் கட்ட வேலைப்பாடுகள் நடைபெற்றவேளை, இடையில் புகுந்த ஹக்கீமும் ஹரிஸும் இடையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறி குழப்பிவிட்டனர்.

நாங்கள் தலைவர் பிரபாகரனுக்கு கீழ் பல்கலைகழகமே முடித்து விட்டோம். சாதாரண முஸ்லிம் மக்கள் எங்களுக்கு எதிரியல்ல. அடுத்த பொது தேர்தலில் முழு முஸ்லிம்களும் மாறி நின்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள். கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்கையை சஜித் பி​ேரமதாச தூக்கி எறிந்துவிட்டார் என்றார்.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர் லோகேஸ்வரன், கொள்கை பரப்பு செயலாளர் கே.நவேந்திரன், உப தலைவர் விக்னேஷ்வரன், மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tue, 12/03/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக