புலிகளை விற்றுபிழைக்காமல் அபிவிருத்தியை நோக்கி தமிழ் தலைமைகள் செல்ல வேண்டும்

பொதுஜன பெரமுன மட்டு. மாவட்ட அமைப்பாளர்

தமிழ் மக்களுக்காக தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை விற்றுப்பிழைக்காமல் உண்மையான அபிவிருத்திப் பாதையை நோக்கி தமிழ் தலைமைகள் செல்லவேண்டும் என பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தற்போது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி உள்ளது. எந்த ஒரு பொதுமகனும் பயங்கொள்ளத் தேவையில்லை, அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்

கடந்த ஆட்சியில் ஒரு இனம் சார்ந்து அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன, அத்துடன் தகுதி இல்லாத நபர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக உயர் பதவிகள் வழங்கப்பட்டு இருந்தன.

அதுமாத்திரம் இல்லாது தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அபிவிருத்தி உட்பட பாதுகாப்பும் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும்.

கோட்டாபய ஜனாதிபதியானால் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் நடத்த முடியாது என பொய் பிரச்சாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்பி எங்களது வாக்குகளை குறைக்கும் நோக்குடன் செயற்பட்டனர்.

ஆனால் அவ்வாறு நடைபெற வில்லை. இந்த வருடம் எந்தவொரு பிரச்சினைகளும் இன்றி மாவீரர் தினத்தினை அனுட்டிக்க முடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டமானது கடந்த காலங்களில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டது, தற்போது உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய பணிக்கப்பட்டுள்ளது, அதனால் மட்டக்களப்புக்கு அமைச்சர் பதவிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என கவலைகொள்ளத் தேவையில்லை. மட்டக்களப்பில் பொதுஜன பெரமுன முன்னணியும், அதனுடன் சேர்ந்த கட்சிகளுடனும் இணைந்து அபிவிருத்திப் பணிகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை