முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 4/257ஓட்டங்கள்

நியூஸிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, நேற்றய ஆட்டநேர முடிவில், 4விக்கெட்டுகளை இழந்து 257ஓட்டங்களை பெற்றுள்ளது.  

ஆட்டநேர முடிவில், ஸ்டீவ் ஸ்மித் 77ஓட்டங்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 25ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.  

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியின் தலைவர், முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஒரு ஓட்டம் பெற்றிருந்த வேளை தனது முதல் விக்கெட்டை இழந்தது.  

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோ பர்ன்ஸ் தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேகன், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னருடன் ஜோடி சேர்ந்து, 60ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, வோர்னர் 41ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  

இதன்பிறகு களம்புகுந்த அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேகனுடன் ஜோடி சேர்ந்து 83ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டார்.  

இதன்போது மார்னஸ் லபுஸ்சேகன் 63ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மெத்தியு வேட் 38ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.  

இதற்கமைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி, 4விக்கெட்டுகள் இழப்புக்கு 257ஓட்டங்களை பெற்றது.  

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கொலின்டி கிராண்ட்ஹோம் 2விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1விக்கெட்டினையும் பதம்பார்த்தனர்.நியூசிலாந்து அணி 1987ம் ஆண்டு தனது முதல் பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆடியமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் அவுஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியமை விசேட அம்சமாகும்.  

இன்னும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று அவுஸ்திரேலிய அணி தொடரவுள்ளது.

Fri, 12/27/2019 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை