இரத்தினபுரி மாவட்டத்தில் 3,800 டெங்கு நோயாளர்கள்

கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் மரணம்

இரத்தினபுரி மாவட்டத்தில் இவ்வருடம் 3,800 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டதாகவும், அவர்களில் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் இறுதிவரை 3,800 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட இறுதி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட செயலகத்தில் நடை பெற்றது. இதன்போதே அவர் இதனை தெளிவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுகாதார அத்தியட்சகர்,

மனித செயற்பாடுகள் காரணமாகவே இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இவ்வருடத்தில் 3800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நகர பிரதேசங்களில் முறையான சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கிராமப்பகுதிகளில் சுற்றாடல் சுத்தம் செய்யப்பபடும் நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதில்லை. வீடுகளின் சுற்றாடல்களில் காணப்படும் டின் வகைகள், தகர, பிளாஸ்டிக் கொள்கலன்கள், ஏனைய அழியாப் பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் நுளம்புகள் இலகுவாக பெருகின்றன. இவை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டாலும் மக்கள் இதே தவறினை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். சுகாதாரத் துறைக்கு இது ஒரு மாபெரும் சவாலாகும். நிலைமைகளை கட்டுப்படுத்த டெங்கு சுத்திகரிப்பு வாரம் உட்பட புகை அடித்தல் போன்ற பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

பொது மக்களினால் முழுமையான பங்களிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே டெங்கு நோயிலிருந்து பொது மக்களை மீட்டெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த, அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, வாசுதேவ நாணயக்கார, ஜோன் செனவிரத்ன, ஜானக உட்பட அரச அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

 பலாங்கொடை தினகரன், இரத்தினபுரி சுழற்சி நிருபர்கள்

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை