இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-−0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கஅணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சென்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸிற்காக 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 95 ஓட்டங்களையும், சுபைர் ஹம்சா 39 ஓட்டங்களையும், வெர்னொன் பிளெண்டர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோ டென்லி 50 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், வெர்னொன் பிளெண்டர் 4 விக்கெட்டுகளையும், கார்கிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும். என்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிரிடோரியஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

103 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 272 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 376 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ராஸ்ஸி வெண்டர் டஸன் 51 ஓட்டங்களையும், வெர்னொன் பிளெண்டர் 46 ஓட்டங்களையும், என்ரிச் நோட்ஜே 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, 376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 268 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரொறி பர்ன்ஸ் 84 ஓட்டங்களையும், ஜோ ரூட் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், என்ரிச் நோட்ஜே 3 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிரிடோரியஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 95 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் திகதி கேப்டவுன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை