விசேட பாராளுமன்ற அமர்வை கூட்டிய பிரதமர் ஏன் வரவில்லை?

விசேட பாராளுமன்ற அமர்வு நடத்துவதற்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பை விடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராதது குறித்து ஜ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் வீட்டுக்கு செல்வதற்கு தயாராகி விட்டதால்தான் சபைக்கு வரவில்லையா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று விசேட பாராளுமன்ற அமர்வு முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தமது எதிர்ப்பை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தை பிரதமரே கூட்டுமாறு கோரியுள்ளார். ஆனால் அவர் சபைக்கு வரவில்லை. பிரதமர் வீட்டுக்கு செல்வதற்கு தயாராகி விட்டார்.

அதனால்தான் அவர் சபைக்கு வருகை தரவில்லை என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, கட்சிச் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய இன்று பாராளுமன்றம் கூடியுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஒரு மணித்தியாலத்தில் தீர்மானம் எடுக்க முடியாது. நாங்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ள போதும் பாராளுமன்றத்தை கூட்டிய பிரதமர் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்றார்.

இவ்வேளையில் மீண்டும் எழுந்து அதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, பிரதமருக்கு பதிலாகவே தான் வந்திருப்பதாக கூறினார்.

இதன்போது, நீங்கள் பிரதமரல்ல.நீங்கள் பிரதமராக வரப் போவதில்லை. அவ்வாறு கனவு காண வேண்டாம். கனவு காணாது வீட்டுக்கு செல்ல தயாராகுங்கள் என தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பதிலளித்த சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் தெரியாமல் பேசுகிறார்.

பிரதமருக்கு பதிலாகவே சபை முதல்வர் பதிலளிக்கின்றார் என தெரிவித்தார்.

இவ்வேளையில், பிரதமர் பாராளுமன்றத்தை கூட்டியிருந்தால் அவர் சபைக்கு வர வேண்டும். அவருக்கு பதிலாக வேறு யாரும் வர முடியாது. இது சாதாரண சபை அமர்வல்ல, விசேட அமர்வு கூட்டப்பட்டுள்ளதால் அவரே வரவேண்டும் என தினேஷ் குணவர்தன மீண்டும் கூறினார்.

இந்த சர்ச்சை நிறைவில் விவாதம் ஆரம்பமானது.

 

(ஷம்ஸ் பாஹிம்)

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை