சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வோம்

காரைதீவில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழவேண்டுமானால் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் காரைதீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

காரைதீவு விளையாட்டுக் கழகம் நிர்மாணித்துவரும் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின்னர் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இக்கூட்டம் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது. கழகபோசகர் வி.ரி.சகாதேவராஜா கழகவரலாறு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் உரையாற்றினார்.

அமெரிக்க பிரஜைக்கு இலங்கையர் வாக்களிப்பது அவசியமா? எமது தமிழ், முஸ்லிம் பெரும்பாலான கட்சிகள் ஒருங்கிணைந்து சஜித்தை ஆதரவளிப்பதென தீர்மானித்துள்ளன.

குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் சஜித்தின் வெற்றி மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது. எனவே நாம் இனிவாக்களிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். வாக்களிப்பதில் காட்டப்படும் அலட்சியம் சர்வாதிகாரிகள் ஆட்சிபீடமேற வழிவகுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் மேலும் பலம் பெறவேண்டும். தலைவர் சம்பந்தர் ஐயா காலத்தில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரது கண்ணுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

எமது தலைவர் அஷ்ரப் மரணித்ததன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எப்படி பிரிந்தது என்பதை அனைவரும் அறிவோம். அதன் காரணமாக முஸ்லிம் சமுகத்தை பெரும்பான்மையினர் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு தமிழ்ச் சமூகம் செல்லக்கூடாது. சிறுபான்மையினம் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து பயணிக்காவிடின் தீர்வு எட்டாக்கனியாகி விடும்.

சிறுபான்மையினம் ஒற்றுமையாக விருந்தால் பல விடயங்களைச் சாதிக்கலாம்.

காரைதீவுக்கும் நிந்தவூருக்குமிடையே பாரம்பரியமான நல்லுறவு நிலவிவந்ததுண்டு. என்னைப் பொறுத்தவரையில் காரைதீவு, சொறிக்கல்முனை, களுவாஞ்சிக்குடி போன்ற பல பகுதிகளின் ஆஸ்பத்திரிகளுக்கு நிறைய உதவிகளை வழங்கியுள்ளேன். ஆனால் அரசியலுக்காக கோடீஸ்வரன் எம்.பி. என்னை இனவாதியாக காட்ட பேசுவார். நான் ஒருபோதும் அப்படியில்லை.

நமது தலைவர்கள் பேசிப்பேசி மிகவும் கவனமாக இரு சமுகங்களையும் வழிநடாத்தி வருகிறோம். எமக்குள்ள இன்றைய பிரச்சினை கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமே. இதனை மிகவும் கவனமாக கையாளவேண்டும். எமது தலைவர்களான சம்பந்தன் ,ஹக்கீம் ஆகியோர் காலத்திலே அதனை விட்டுக்கொடுப்புடன் தீர்வுகாண வேண்டும்.

அதனை அப்படியேவிட்டு விட்டால் எதிர்கால சந்ததி தேவையில்லாமல் முட்டிமோதிக்கொள்ள வழிவகுக்கும். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

யுத்தம் வெல்லப்பட்டபிறகு 2015வரை நாட்டில் என்ன நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். எமது மக்கள் அழித்தொழித்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். கடத்தல், நிலஅபகரிப்பு காணாமல் ஆக்கப்பட்டார்கள் மக்கள் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைக்கூற முடியாது.

வடக்கு, கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாசதான் எமது ஜனாதிபதி என்பதை என்றோ தீர்மானித்து விட்டார்கள். எனவே ஊரோடு ஒத்துப்போகவேண்டும். ஆதலால் நாமும் சஜித்தையே ஆதரித்து வெற்றியின் பங்காளராவோம் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை