எந்த நாடும் அழுத்தம் கொடுக்க இடமளியேன்

இலங்கை நிகழ்ச்சிநிரலை வெளிநாட்டில் முடிவு செய்பவரை மக்கள் நிராகரிப்பர்

எமது நாட்டின் நிகழ்ச்சி நிரலை வெளிநாட்டில் முடிவு செய்யும் வேட்பாளருக்கு எமது நாட்டு மக்கள் ஆணையை வழங்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எந்த நாட்டுக்கும் சஜித்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் நாட்டில் ஒரு காலையும் வெளிநாட்டில் இன்னொரு காலையும் வைத்துக் கொண்டு தான் செயற்படப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்ற இறுதி பிரசார கூட்டங்கள் வெலிகம,காலி,களுத்துறை மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களில்

நடைபெற்றன.

வெலிகம கூட்டத்தில் உரையாற்றிய அவர்,'ஒரிஜினல்' இலங்கை பிரஜைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கோருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல பிரதேசங்களையும் உள்ளடக்கி 153 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். உங்கள் பிரதேச மக்களின் பிரச்சினைகளை நான் நேரடியாக ஏற்று முன்னெடுப்பேன். கப்பரதொட்ட மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வேன். மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருக்கிறோம். சிறுபோக அதிகார சபையொன்று உருவாக்க இருக்கிறேன். விவசாயிகளுக்கு இலவசமாக பசளை நிவாரணம் வழங்க இருப்பதோடு நெல்லுக்கு 50 ரூபா உத்தரவாத விலை வழங்குவோம்.

சமுர்த்தி திட்டத்தை மேலும் பலப்படுத்துவதோடு ஜனசவிய திட்டத்தையும் மீள ஆரம்பிக்க இருக்கிறோம். இளைஞர்களுக்காக விசேட திட்டங்களை முன்னெடுக்கவும் இருக்கிறோம்.இளைஞர்களுக்காக இலவசமாக கல்வி வழங்கி அவர்களுக்கு பிரதேச தொழில்நுட்ப பூங்காக்களில் வாய்ப்பளிக்கப்படும்.

பெண்களுக்கு 3 மாத காலத்தினுள் சமூக பொருளாதார உரிமைகளை பலப்படுத்த சட்டங்கள் கொண்டுவருவோம். ஆட்டோ சாரதிகளுக்கு வட்டியில்லாமல் 3 இலட்சம் ரூபா கடனுதவி வழங்க இருக்கிறோம்.

சாதாரண மக்களின் அபிலாசைகளை உணர்ந்தே எமது கொள்கை பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.எமது முற்போக்கான கொள்கைகளை யாதார்தமாக்குவதற்காக அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு கோருகிறேன்.

ஊடகத்துறைக்கு உச்ச பட்ச பாதுகாப்பு சுதந்திரம் வழங்கப்படும். 3 வாரமாக எமது எதிராளி வேட்பாளரை நேரடி விவாதத்திற்கு அழைத்தேன். தனியாக வரமுடியாவிட்டால் அவரது அண்ணனையும் அழைத்துக் கொண்டு விவாதத்திற்கு வருமாறு சவால் விட்டிருந்தேன். அதுவும் போதாவிட்டால் முழு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வருமாறு குறிப்பிட்டேன்.ஆனாலும் அவர் முன்வரவில்லை.

16 ஆம் திகதி வாக்களிக்கும் போது 'ஒரிஜினல்' இலங்கை பிரஜைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கோருகிறேன். நான் யாருக்கும் அடிபணியப் போவதில்லை.எந்த நிபந்தனைக்கும் தலைசாய்க்க மாட்டேன். எந்த நாட்டுக்கும் சஜித்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. நாட்டில் ஒரு காலையும் வெளிநாட்டில் இன்னொரு காலையும் வைத்துக் கொண்டு நான் செயற்படமாட்டேன்.வெளிநாடுகளில் கல்வி பயின்றாலும் நான் இரட்டைப் பிரஜா உரிமை பெற கனவில் கூட முடிவு செய்யவில்லை. நான் ஒரிஜினல் இலங்கையர என்பது தொடர்பில் பெருமையடைகிறேன்.

16ஆம் திகதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் வாகன சலுகை பத்திரங்களுக்கு அனுமதிக்க மாட்டேன். ஜனாதிபதி மாளிளை அலரிமாளிகையை மறுசீரமைக்க மக்களின் வரி பணத்தை நாசமாக்க மாட்டேன். நான் எனது தனிப்பட்ட வாகனத்தையும், மாளிகையும் பாவிக்க மாட்டேன். குண்டு துளைக்காத வாகனங்கள் எனக்கு அவசியமில்ல. ஜனாதிபதி, பிரதமருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள், ஆனால், சாதாரண மக்களுக்கு ஒன்றும் இல்லை. இதில் என்ன சாதாரணத்துவம் உள்ளது.

வறுமையை ஒழிக்கவும் சமுர்த்தியை வலுப்படுத்தி வறுமையை ஒழிப்போம். ஜனசவிய திட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவோம். பல தசாப்தங்களாக வறுமையை ஒழிக்க முடியாதுள்ளது. நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு 54 ஆயிரம் ரூபா அவசியமென புள்ளி விபரவியல் திணைக்களம் கூறுகிறது. நாட்டில் எத்தனை குடும்பங்கள் 54ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன?. 54ஆயிரம் ரூபா நான்கு பேர் கொண்ட குடும்பங்களின் உணவு தேவைக்கே போதுமானது. அதனைவிட பல விடயங்கள் உள்ளன. பல வருடங்களாக பல அரசாங்கங்கள் வறுமையை பற்றி பேசுகின்றன. எனது அரசாங்கத்தில் வறுமையை ஒழித்து நாட்டை உயர்ந்த இடத்திற்கு கட்டாயம் கொண்டுவருவோம். எதிர்காலத்தில் இளைஞர் படையொன்று நாட்டை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளது. புதிய தொழில்நுட்ப கல்லூரி, கைத்தொழில் பேட்டை, தகவல் தொடர்பாடல் கல்லூரியை ஒவ்வோரு பிரதேச செயலக மட்டத்திலும் ஆரம்பிக்கப்படும். டிஜிட்டல் புரட்சியை முழு நாட்டுக்கும் கொண்டுசெல்வோம். பிரதேச செயலக மட்டத்தில் கைத்தொழில் பேட்டை உருவாக்கப்படும்போது அனைத்து பிரதேச செயலக பிரிவுகளும் அபிவிருத்தியடையும்.

 

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை