ரணில்,சஜித்தின் பெயர்கள் கையளிப்பு​

எதிர்க் கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பான விவகாரம் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விடயப்பரப்புக்கு உட்பட்டது இல்லை.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கட்சித் தலைவர்களின் பங்கெடுப்புடன் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே சபாநாயகர் இதனைத் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டியது அக் கட்சியின் பொதுச் செயலாளரின் பொறுப்பாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கையெழுத்திட்ட கடிதமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா கையளித்தபோது இவ் விவகாரம் பற்றிப் பேசப்பட்டது.

எதிர்க் கட்சித் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய கடிதம் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வாசிக்கப்பட்டது.

அதன் பின்னரே, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பேரேரா கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால.டி.சில்வா, அமீர் அலி, அஜித்.பி.பேரேரா ஆகியோர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை