சாதகமோ, பாதகமோ பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே உகந்தது

எமது தரப்புக்கு சாதகமானதா? பாதகமானதா? என பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே உகந்ததென முன்னாள் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரும் ஐ.தே.கவின் முக்கியஸ்தருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைசாய்ப்பதாக கூறிய அவர், மக்கள் தமக்கு விரும்பிய ஆட்சியை தீர்மானிக்கும் வகையில் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி அமைச்சராக பாரிய சேவையாற்ற முடிந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் நாடாக 2012 முதல் கறுப்புப் பட்டியிலிடப்பட்டிருந்த எமது நாட்டின் மீதான தடையை கடந்த மாதம் நீக்க முடிந்தது.

கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களினூடாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் இடம்பெறுவதால் இவ்வாறு கருப்புப் பட்டியிலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான நிலைமைகளை மாற்றியதையடுத்து கறுப்புப் பட்டியலிலிருந்து இலங்கையின் பெயர் அகற்றப்பட்டுள்ளது.இதற்கு எமது அமைச்சு முக்கிய பங்காற்றியது. நான் அமைச்சராக இருந்த போது கட்சி ரீதியில் எவரையும் தண்டிக்கவோ மாற்றவோ இல்லை. நான் அமைச்சராக பதவி ஏற்றபோது இருந்த அதே மனநிலையுடனே இன்று வெளியேறுகிறேன். மக்கள் ஆணையை மதிக்கிறோம்.

அதற்கமைய உடன் பொதுத் ​தேர்தலை நடத்துவதே சரியானது. இதில் எமக்கு சாதக ,பாதக நிலைபற்றி சிந்திக்க தேவையில்லை. ஏனென்றால் உடன் நடத்தினாலும் தாமதித்து நடத்தினாலும் பொதுத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தியாக வேண்டும். பெப்ரவரிக்கு பின்னர் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியும். எனவே மக்களுக்கு விரும்பிய ஆட்சியை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை