பதவிகள் பொறுப்புக்களேயன்றி, சிறப்புரிமைகள் அல்ல

வறுமை ஒழிப்புக்கும் ரயில்வேக்கும் புதிதாக இராஜாங்க அமைச்சுகள்

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் பதவிகள் பொறுப்புக்களேயன்றி அவை சிறப்புரிமைகள் அல்ல என்பதை எப்போதும் கவனத்திற் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில்,

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அவர்களது

 

செயற்திறனான பங்களிப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அரச துறையை வினைத்திறனாக மாற்றி சிறந்த மக்கள் சேவையினூடாக புதியதோர் யுகத்திற்கு நாட்டை கொண்டு செல்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

தற்போது வழங்கப்பட்ட அனைத்து இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கும் விரிவான பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனது பல வருடகால அனுபவத்தின் வாயிலாக கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய கடந்த தேர்தலின் போது இனங்காணப்பட்ட மக்கள் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை ஒழுங்கமைத்துள்ளேன்.

ரயில் சேவையை முன்னேற்றி வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளமையினால் அதற்காக புதிய இராஜாங்க அமைச்சொன்றை வழங்கியுள்ளேன்.

சுதேச வைத்தியத் துறையை முன்னேற்றுவதுடன் அதனை சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய விடயமாக குறிப்பிடப்பட்டிருந்த வறுமையை ஒழிக்கும் நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயமான மகளிர் நலன் பேணல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம், சுற்றுலா அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தி புதிய அமைச்சுப் பதவிகளை திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை