சர்வதேச கேந்திர மையத்தை ஸ்தாபித்து ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்துவேன்

நாட்டில் தற்போதுள்ள ஊடக சுதந்திரம் மேலும் பலப்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊடகத்துறையை ​மேம்படுத்தும் வகையில் தேசிய சர்வதேச ஊடக கேந்திர மையத்தை இலங்கையில் ஸ்தாபித்து அதன் மூலம் சர்வதேச ஊடகங்களுடனான தொடர்பை வலுபடுத்தி ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதுள்ள ஊடக சுதந்திரம் போதாது. அது மேலும் வலுப்படுத்தப்படும். மட்டுப்படுத்தப்படாத ஊடக சுதந்திரமா? அல்லது இம்சைகள், அழுத்தங்கள் நிறைந்த மட்டுப்படுத்தப்பட்ட ஊடக சுதந்திரமா? அவசியம் என்பதை ஊடகவியலாளர்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையிலுள்ள 'வோட்டர்ஸ் எட்ஜ்' ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ராஜித சேனாரத்ன

உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,-

நாட்டில் ஊடகம் என்பது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூணாகும். நீதித்துறை, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றுடன் நான்காவது முக்கிய தூணாக ஊடகம் திகழ்கிறது.

கடந்த காலங்களில் ஊடகத்துறைக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் நாம் சிந்தித்து பார்ப்பது அவசியம். தெற்கிலும் வடக்கிலும் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர்.

தெற்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, உபாலி தென்னக்கோன், கீத் நொயர் போன்றோர் மட்டுமன்றி வடக்கிலும் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டால் படுகொலை அல்லது கடத்தல், தாக்குதல் என்ற நிலைமையே காணப்பட்டது.

வெற்றிகொள்ளப்பட்ட ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டியது அனைத்து ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களினதும் பொறுப்பாகும். ஊடகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி ஊடகவியலாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியவர்களை ஆதரிப்பதா அல்லது ஊடக சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக்கொடுத்தவர்களை ஆதரிப்பதா என சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தனியொருவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஊடகங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து செய்திகளைத் தீர்மானிக்கும் யுகத்துக்குப் போவதா? அல்லது தற்போதுள்ள முழுமையான ஊடக சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதா? என்பதை சிந்திக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு எந்த வித பாதிப்போ இம்சைகளோ கிடையாது. ஊடகவியலாளர்களை ஏசுவது கூட இந்த அரசாங்க காலத்தில் இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். ஊடகத்துறை தொடர்பில் நாம் புதிய திட்டங்களை வைத்துள்ளோம். நாட்டில் தற்போதுள்ள ஊடக சுதந்திரம் போதுமானதல்ல. எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் அதனை மேலும் பலப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், எம். ஏ. எம். நிலாம்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை