வாக்காளர்களை குழப்பும் வேட்பாளர் மீது நடவடிக்ைக

தேர்தல் பரப்புரைகள் நள்ளிரவுடன் நிறைவு

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை உஷார் நிலையில் பொலிஸ், அதிரடிப்படை

எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள் யாவும் இன்று (13) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன.

எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென மக்கள் ஆறஅமர யோசித்து தீர்மானம் எடுப்பதற்காகவே நாளையும் (14) நாளை மறுதினமும்(15) தேர்தல் பிரசாரங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்த அமைதியைக் குழப்பும் வகையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையே எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களேயுள்ள நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை தேர்தல் களத்தில் ஒரு பெண்ற, இரண்டு பெளத்த மதகுருமார் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 16ஆம் திகதி நாடுமுழுவதுமுள்ள 12 ஆயிரத்து 845 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல்களில் ஆகக்கூடியதான 35 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் மிக நீண்ட வாக்குச் சீட்டு, அதிக எண்ணிக்கையான வாக்குப்பெட்டிகள், அதிக செலவு, கூடுதல் கண்காணிப்பாளர்கள், வழமையான யானை மற்றும் கை சின்னங்கள் இல்லாமை, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடாமை, பரபரப்பான தேர்தல் பிரசாரங்கள் ஆகிய சிறப்பம்சங்கள் காரணமாக இம்முறை இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சர்வதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன் 35 வேட்பாளர்களின் சின்னங்களையும் உள்ளடக்கும் வகையில் முதற்தடவையாக மிக நீண்டதான 26 அங்குல (66 சென்ரிமீற்றர்) நீள வாக்குச் சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வாக்காளர்களின் வசதி கருதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் கால அளவும் சுமார் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களின் வேலைப் பளு அதிகரிக்கும் அதேநேரம், வழமைக்கும் மாறாக பெறுபேறுகள் வெளிவரும் நேரம் தாமதிக்கப்படலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அதிகரித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை காரணமாக வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கைகளும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளன.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை