சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ சஜித்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மூதூர் நீர்த்தாங்கி வளாகத்தில் திங்கட்கிழமை (04) சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முகமாக நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் அவர் தொடர்ந்து கூறியதாவது, நாட்டில் இனவாத செயலை புரிபவர்களை மக்கள் யார் என இனங்காண வேண்டும். சமூகத்தை காட்டிக் கொடுக்கும் சக்திக்கு வாக்களிக்காதீர்கள். சொல்லாலும், செயலாலும் முன்நிறுத்தப்பட்ட ஒரு தலைவரே சஜித் பிரேமதாசா ஆவார்.

இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தை பார்த்து நாட்டைவிட்டு வெளியேறு என பேரினவாதம் சொல்கின்றது. இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மிக நிதானமாக சிந்திக்க வேண்டும். இன்று ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்றவர்கள் வாக்குக் கேட்டு சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க முயல்கின்றனர்.

குற்றமே செய்யாத என்னை பல பேரினவாத தீயசக்திகள் ஒன்றுபட்டு சிறுபான்மையை ஒடுக்க முற்பட்டனர். இந்நிலையில் தான் நாங்கள் ஒன்றுபட்டு அவ்விரோதத்தை தோற்கடித்தோம். இதற்காக நாட்டு மக்கள் செய்த துஆ, இறைவன் அருள் எம்மை பாதுகாத்தது.

மூதூர் பிரதேசம் பல வருட காலமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட இடம். அக்கால கட்டத்தில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை என்றுமே மறப்பதற்கில்லை.

மூதூர் பிரதேச மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சமூகத்தை வெற்றி கொள்ளும் வாக்குகளாக அமையும் என்றார்.

(மூதூர் தினகரன் நிருபர்)

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை