இங்கிலாந்து அணி அபார வெற்றி!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கிறிஸ்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 6 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மார்டின் கப்டில் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களம்புகுந்த டிம் செய்பர்ட், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்து 33 ஓட்டங்களை இணைப்பட்டாமாக பகிர்ந்துக் கொண்டார்.

இதன்போது கொலின் முன்ரோவும் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கொலின் டி கிராண்ட்ஹோமி 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் களத்தில் தாக்குபிடிக்க, மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய டிம் செய்பர்ட், 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரோஸ் டெய்லர், 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டார்ல் மிட்செல் 30 ஓட்டங்களுடனும், மிட்செல் சான்ட்னர் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன், அடில் ராஷித் மற்றும் பெட்ரிக் பிரவுண் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டாவிட் மாலன் 11 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 35 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், அணித்தலைவர் ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும், சேம் பிளிங்ஸ் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேம்ஸ் வின்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை வெலிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை