காலவரையறை இன்றிய ஓய்வை அறிவித்தார் கிளென் மெக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான டொக்டர் மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எதிரான ரி 20 தொடரில் இருந்தும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ரி 20 தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மெக்ஸ்வெலின் இடத்திற்கு அதிரடி துடுப்பாட்ட வீரரான டி ஆர்சி சோர்ட்டினை அழைத்திருக்கின்றது.

கிளென் மெக்ஸ்வெல் குறித்து கருத்து வெளியிட்டிருந்த உளநல நிபுணரான வைத்தியர் மைக்கல் லோய்ட் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”கிளென் மெக்ஸ்வெல் தற்போது அவரது உள ஆரோக்கியம் தொடர்பில் சிறிது சிக்கலுடன் காணப்படுகின்றார். இதனால், அவர் சிறிது காலத்திற்கு கிரிக்கெட் விளையாட்டினை தவிர்ந்து இருக்கவுள்ளார்.” மெக்ஸ்வெல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்ப அவருக்கு தங்களால் முடிந்த அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் எனவும் வைத்தியர்மைக்கல் லோய்ட் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான ரி 20 தொடரின் முதல் போட்டியில் கிளென் மெக்ஸ்வெல், அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி பெற தனது அதிரடி அரைச்சதத்துடன் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, ரி 20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் வென்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி ரி 20 தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை