போட்டியை சமன் செய்த செல்சி பாசிலோனா அணிக்கு ஏமாற்றம்

ஐரோப்பிய  சம்பியன்ஸ்  லீக் தொடர்:

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய குழுநிலை போட்டிகள் சில இலங்கை நேரப்படி நேற்று (06) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

கடந்த 46 போட்டிகளில் முதல் முறையாக தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் எந்த கோலையும் பெறாத பாசிலோனா அணி ஸ்லாவியா பரகுவேவுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.

கடந்த 2012 தொடக்கம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் முதல் முறை கோல் அல்லது கோல் உதவியை செய்யாத லியொனல் மெஸ்ஸி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது. முதல் பாதியில் மெஸ்ஸி இடது காலால் மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் ஒப்ட்ரேஜ் கோலர் சிறப்பாக தடுத்தார். எனினும், பார்சிலோனா அணி சம்பியன்ஸ் லீக் எப் குழுவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு ஸ்லாவியா பரகுவே கடைசி இடத்தில் உள்ளது.

வெஸ்ட்பலன்ஸ்டாடியோ அரங்கில் நடைபெற்ற போட்டியில் அச்ரப் ஹாகிமி இரண்டாவது பாதியில் பெற்ற இரட்டை கோல் மூலம் இன்டர் மிலானுக்கு எதிராக டோர்ட்முண்ட் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் இத்தாலியின் இன்டர் மிலான் இரட்டை கோல் பெற்று உறுதியான முன்னிலையை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே 21 வயதுடைய ஹாகிமி கோலொன்றை பெற்று நம்பிக்கை கொடுக்க 64 ஆவது நிமிடத்தில் ஜூலியன் பிரண்ட் பெற்ற கோல் மூலம் கோல் எண்ணிக்கையை டோர்ட்முண்ட் 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

தொடர்ந்து ஹாகிமி 77 ஆவது நிமிடத்தில் அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்று ஜெர்மனி கழகத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இதன்மூலம் எப் குழுவில் இன்டர்மிலானை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய டோர்ட்முண்ட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

மிகவும் பரபரப்பாக நடந்த எஜக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4- – 1 என்ற கோல் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்த செல்சி அணி போட்டியை 4- – 4 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்து தீர்க்கமாக புள்ளிகளை பெற்றுக் கொண்டது.

ஸ்டாம்போர்ட் அரகில் நடைபெற்ற இந்தப் போட்டியில் எஜக்ஸ் வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்றதால் இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரத்தை அந்த அணி ஒன்பது வீரர்களுடனேயே ஆடியது.

நெதர்லாந்து சம்பியனும் கடந்த பருவத்தில் அரையிறுதி வரை முன்னேறிய அணியுமாக எஜக்ஸ் போட்டியின் முதல் பாதி முடியும்போது 3- -– 1 என்ற கோல் வித்தியாசத்தில் வலுவான முன்னிலை பெற்றது.

போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே குவின்சி ப்ரோம்ஸ் உதைத்த ப்ரீ கிக் செல்சி முன்கள வீரர் டொம்மி அப்ரஹாமிடம் பட்டு எஜக்சுக்கு சார்பாக ஓன் கோலாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து பத்து நிமிடங்களில் எஜஸ் மற்றொரு கோலை பெற அந்த அணி 4- – 1 என முன்னிலை பெற்றது.

எவ்வாறாயினும் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய செல்சி 63 ஆவது நிமிடத்தில் சீசர் அஸ்லிகியுடா பெற்ற கோல் மூலம் நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில் 71ஆவது நிமிடத்தில் ஜேர்கின்ஹோ பெனால்டி மூலமும் ரீஸ் ஜேம்ஸ் 74 ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்களைக் கொண்டு செல்சி போட்டியை சமன் செய்தது.

இதன் மூலம் எச் குழுவில் இந்த இரு அணிகளும் தலா 7 புள்ளிகளுடன் இருப்பதோடு அந்தக் குழுவில் வெலன்சியா அணியும் 7 புள்ளிகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல், பெல்ஜியம் கழகமான கென்க் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 14 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜினியோ விஜ்னால்டு நெருங்கிய தூரத்தில் உயர உதைத்து கோல் பெற்றதன் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

முதல் பாதி முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போது கென்க் அணியில் முன்கள வீரர் ம்பவானா சமட்டா கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் அந்த அணி பதிலடி கொடுத்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே அலக்ஸ் ஒக்லாடே–சம்பர்லைன் தாழ்வாக உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தியதன் மூலம் லிவர்பூல் வெற்றியை உறுதி செய்தார். சம்பியன்ஸ் லீக்கின் ஆரம்ப போட்டியில் நபோலியிடம் தோல்வியை சந்தித்த லிவர்பூர் அடுத்து வந்த நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வென்றதன் மூலம் ஈ குழுவில் நபோலியை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது.

Thu, 11/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக